April 4, 2018
தண்டோரா குழு
கமலுக்கு போராட்டம் நடத்த துப்பில்லை, ஆர்ப்பாட்டம் நடத்த வக்கில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவின் ஒரு நாள் உண்ணாவிரதத்தால் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை மத்திய அரசின் எடுபிடி போல் மாநில அரசு செயல்படுகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கமலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,
கமல்ஹாசனை யாரும் அரசியல்வாதியாக ஏற்று கொள்ள மாட்டார்கள்.கமலிடம் நடிகருக்கான பண்பு மட்டுமே உள்ளது.ஆனால்,அரசியல்வாதிக்கு உரிய பண்பு இல்லை.நாட்டை விட்டே ஓடி விடுவேன் என்றவர் அவர்.வாய்க்கு வந்தபடி கமல் பேசுவது நல்லதல்ல.காவிரி பிரச்சனை பற்றி கமலுக்கு என்ன தெரியும் ? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயக்குமார், கமலுக்கு போராட்டம் நடத்த துப்பில்லை, ஆர்ப்பாட்டம் நடத்த வக்கில்லை என்றும் கூறினார்.
மேலும், கமலுக்கு பதில் சொல்ல தனக்கு நேரம் இல்லை. காவிரியில் நமது உரிமையை பெறுவதே நோக்கம்.டிவிட்டரில் அரசியல் செய்து, எழுதி வைத்து படிக்கும் சிறந்த நடிகர் கமல் என்றும் அரசியல்வாதி என ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு கமல்ஹாசனுக்கு பக்குவம் கிடையாது.ஸ்டாலினும், கமலும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதில் கைதேர்ந்தவர்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.