April 2, 2018
தண்டோரா குழு
கோவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று(ஏப் 2) திமுகவினர் இருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி சாலையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்திற்கு பிரதமர் மோடி மோசடி செய்ததை கண்டித்து தமிழகத்தில் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு பல்வேறு கட்யினர் கைதாகி வருகின்றனர்.
நீண்ட வருடங்களாக சட்டப்போராட்டத்தின் விளைவாக ஆறுவாரகாலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும் என மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.ஆனால் காலக்கெடு முடிந்த பின்னும் மத்திய மோடி அரசு கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை.
தமிழகத்தின் வாழ்வாதரமான காவிரி விவகாரத்தில் மோடி அரசு மோசடித்தனம் செய்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன இயக்கங்கள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை அவினாசி சாலையில் திமுகவின் 39 வட்ட கழக செயலாளர் பி.டி.முருகேசன் மற்றும் சிங்கை சதாசிவம் இருவரும் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள பீளமேடு சிக்னல் அருகே ஒடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்த காவல்துறையினர் இருவரையும் பிடித்து மண்ணெண்ணெய் பாட்டிலை பிடிங்கி அவர்களை கைது செய்து பீளமேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.தீ குளிக்க முயன்றவர்களை தடுக்க முற்பட்ட போது காவல் துறையினருக்கும் அவர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.