March 30, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தனது ராஜ்ய சபா பதவியை ராஜினாமா முடிவு செய்துள்ளதாக அதிமுக எம்.பி. முத்து கருப்பன் தெரிவித்துள்ளார்.அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன்டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
காவிரிக்காக தற்கொலை போன்ற மலிவான செயலில் ஈடுபட மாட்டேன். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும்,அவையை முடக்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. மக்களுக்கு குடிக்கவும்,விவசாயிகளுக்கு விவசாயம் செய்யவும் தண்ணீர் கிடைக்காத போது MP பதவி எனக்கு எதற்கு? விவசாயிகள் பிரச்சனையை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம். வாரியம் அமைக்காவிட்டால் ராஜினாமா செய்யும் முடிவில் மாற்றம் இல்லை என்றார்.
மேலும், தனக்கு மாநிலங்களவையில் இன்னும் 2 ஆண்டுகள் பதவி உள்ளதாகவும் நாங்கள் வாக்களித்து தான் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.எனவே மக்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும் மாநிலங்களவை தலைவரிடம் அடுத்த வாரம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார். முத்துக்கருப்பனின் பதவிக்காலம் 2020-ம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.