March 27, 2018
தண்டோரா குழு
கோவையில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு எதிராக தொடர்ந்து விரோத போக்கை கடைப்பிடித்து வரும், மாவட்ட உதவி திட்ட அலுவலர் மற்றும் கண்காணிப்பாளரை கண்டித்து ஆசிரியர் பயிற்றுனர்கள் போராட்டத்தில் இன்று(மார்ச் 27)ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட உதவி திட்ட அலுவலர் பெல்ராஜ் மற்றும் கண்காணிப்பாளர் மனோகரன் ஆகியோர் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு எதிராக தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விரோத போக்கை கடைப்பிடித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாவட்ட தொடக்க அலுவலகத்தில்,ஆசிரியர் பயிற்றுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்,ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு தேர்வு நிலை ஆணை வழங்காமல் இரண்டு ஆண்டுகளாக இழுத்தடிப்பு செய்வதாகவும், பெண் ஆசிரியர்களுக்கு மகப்பேறு காலத்தில் விடுப்பு எடுக்க அனுமதிப்பதில்லை எனவும் புகார் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
பெண் ஆசிரியர் பயிற்றுனர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், எனவே உடனடியாக அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் போராட்டத்தின் போது தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் முடிவடையும் வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.