March 26, 2018
தண்டோரா குழு
தேவாலயங்கள் இடிப்பு, பைபிள் எரிப்பு போன்ற சமூக விரோதிகள் மீது மத்திய மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக சிறுபான்மை மக்கள் நலக்குழு பொதுச்செயலாளர் ப.மாரிமுத்து குற்றம் சாட்டினார்.
மதுரையில் தேவலாயங்கள் இடிப்பு, பைபிள் எரிப்பு சம்பவங்களை கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் திங்களன்று கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட தலைவர் முகமதுமுசீர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.ஜெரோம்ரோட்ரிக்ஸ் வரவேற்புரயாற்றினார். ஆர்ப்பாட்ட கண்டன உரையை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில பொதுச்செயலாளர் ப.மாரிமுத்து, சிசிஐ ஆங்கிலிக்கன் பேராயர் ரெயின்ஹார்டு சேகர், பாஸ்டர் ஜெபராஜ், பிரின்ஸ்பார்னபாஸ், விதனசுகன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சங்கத்தின் பொதுச்செயலாளர் ப.மாரிமுத்துபேசுகையில்,
சமீபகாலமாக சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் மீதும் தலித் மக்கள் மீதும் திட்டமிட்டு இந்துத்துவ மதவெறியர்கள் தக்குதல் நடத்துகின்றனர். சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு ஆங்காங்கே இதுபோன்ற சம்பங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது மதுரையில் தேவலாயங்கள் இடித்தும், பைபிளை எரித்தும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களில் தீவிர நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மத்திய மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கிறது அல்லது மென்மையான போக்கை கடைபிடிக்கிறது. இதுமிகவும் கண்டிக்கத்தக்கது. இந்திய நாட்டில் அவரவர் விரும்பும் மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. ஐயாயிரம் ஆண்டுகள் பழமைமிக்க தமிழகத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரீகம் வளர்ந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்ட அகழய்வில் தமிழர்களுக்கு சாதி, மதம் இல்லை என்பது ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த மதமும் சொந்த மில்லாத தமிழகத்தில் அவரவர் விரும்பும் மதத்தை ஏற்றுக்கொள்ள முடியும். இந்தியாவில் நிலவிய சாதிய கொடுமைகளின் விளைவாக அன்பை போதித்தவர்களின் மத்த்தை கடைபிடித்தனர் என்பது வரலாறு. வன்முறை நடவடிக்கையால், கொடுக்கப்படும் சலுகையால் மக்கள் மதம் மாறவில்லை. சூத்திரனுக்கு கல்வி எதற்கு என்பதை உடைத்து நொருக்கி கல்விச்சாலையை அனைத்து கிராமங்களிலும் திறந்து கல்வி புகட்டியும், மருத்துவமனைகள் திறந்து இலவச மருத்துவம் பார்த்த கிருத்துவத்தின் அன்பைக்கண்டே மக்கள் கிருத்துவ மத்த்திற்கு மாறினார்கள் என்பது வரலாறு. அன்பால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்பதை வன்முறையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அனைவரும் சகோதரர்கள் என்கிற ஒற்றுமையோடு வாழும் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்துகிற வன்முறையாளர்களின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோன்ற நடவடிக்கையை தடுத்து நிறுத்தி மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.அமிர்தம், வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் கோவை மாவட்ட தலைவர் கே.எஸ்.அப்துல்ரஹ்மான், உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக பங்கேற்றனர். முடிவில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்ட பொருளாளர் எஸ்-புனிதா நன்றி கூறினார்.