March 26, 2018
தண்டோரா குழு
தேனி காட்டுத்தீயில் சிக்கி படுகாயமடைந்து வானகரம் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பார்கவி (26) என்பவர் உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதிக்கு சென்னையில் இருந்து 24 பேரும், ஈரோடு,திருப்பூர் பகுதியைச் சேர்ந்த 12 பேரும் டிரக்கிங் சென்றனர். இவர்கள் சென்ற கொழுக்குமலை வனப்பகுதி கேரள வனத்துறைக்கும், தமிழக வனத்துறைக்கும் இடைப்பட்ட பகுதியாகும். இதற்கிடையில் இவர்கள் டிரக்கிங் முடிந்து திரும்பும் போது காட்டு தீயில் சிக்கி 20 பேர் உடல்கருகி பலியானார்கள். பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், வானகரம் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சென்னையை சேர்ந்த பார்கவி என்பவர் உயிரிழந்தார். இதன் மூலம் குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.