March 24, 2018
தண்டோரா குழு
கால்நடை தீவன வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான,லாலு பிரசாத்துக்கு எதிராக, மாட்டு தீவன ஊழல் தொடர்பாக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.முதல் வழக்கில், லாலுவுக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து, 2013ல் தீர்ப்பு அளிக்கப்பட்டது.இரண்டாவது வழக்கில், மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து,சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.மூன்றாவது வழக்கில், லாலு பிரசாத் யாதவுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் முதல்வர், ஜெகன்னாத் மிஸ்ராவுக்கும், ஐந்து ஆண்டு சிறை மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், – ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் என, 48 பேரும் குற்றவாளிகள் என, சிறப்பு நீதிமன்றம் தண்டனை அறிவித்தது.
இந்நிலையில், கால்நடை தீவனம் தொடர்பான மேலும் இரண்டு வழக்குகள் நிலுவையில்
உள்ளன.அதில், தும்கா கருவூலத்தில் இருந்து, 3.13 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட நான்காவது வழக்கில், ராஞ்சி நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதன்படி முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவன ஊழல் வழக்கில் 18 பேர் குற்றவாளிகள், 12 பேரை விடுவித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.