March 19, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் முன் அனுமதியின்றி உயர்கல்வி பயின்ற 272 ஆசிரியர்களுக்கு கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அரசு தொடக்க பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற குறைந்த பட்ச கல்வி தகுதியாக ப்ளஸ் 2 தேர்ச்சி, டிடிஇ எனும் பட்டயப் படிப்பு முடிக்க வேண்டும். இவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தபின் முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.
இதற்கிடையே தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் டிடிஇ பட்டயப்படிப்புக்கு பின் பட்டப்படிப்பை படித்து வந்தனர்.இதையடுத்து அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.இவ்வாறு உயர்கல்வி படித்தால் மாவட்ட கல்வி அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும்.ஆனால் சில ஆசிரியர்கள் முன் அனுமதியின்றி உயர்கல்வி படிப்பை படித்ததாக புகார் எழுந்தது.
குறிப்பாக 80 சதவீதம் பேர் வகுப்புக்கு செல்லாமல் உயர்கல்வி நிறுவனங்களில் பணம் கொடுத்து முறைகேடாக சான்றிதல் பெற்று உள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது.இதனையடுத்து தொடக்க கல்வி இயக்குனரின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் முன் அனுமதியின்றி உயர்கல்வி பயின்ற 272 ஆசிரியர்களுக்கு கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாலுமுத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.15 நாட்களில் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்,விசாரணையில் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தால், அரசு பணியாளர் நடத்தை விதி 20ஐ மீறியதால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொடக்க கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.