March 16, 2018
தண்டோரா குழு
கோவை அருகே கன மழை பெய்த நிலையில் இடி தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்தது.இந்நிலையில் கோவை க.க.சாவடி அடுத்த ரொட்டிகவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஆறுச்சாமி என்பவரது மனைவியான சித்ரா என்ற இளம்பெண் வீட்டின் அருகே இருந்த வேப்ப மரத்தடியில் துணி துவைத்து கொண்டிருந்துள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக திடீரென இடி தாக்கியதில் உடலில் தீப்பற்றி எரிந்த படியே சித்ரா உயிருக்கு போராடியுள்ளார்.
இதனையடுத்து அருகிலிருந்த மக்கள் ஓடி வந்து தீயை அணைத்தும் சம்பவ இடத்திலேயே உடல் கருகிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனைதொடர்ந்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற க.க.சாவடி காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.