March 8, 2018
தண்டோரா குழு
தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்பிக்கள் அசோக் கஜபதிராஜூ, ஒய்.எஸ்.சவுத்ரி ஆகியோர் மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
ஆந்திராவின் நீண்ட நாள் கோரிக்கையான சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு தொடர்ந்து மத்திய அரசு காலதாமதம் செய்து வந்த நிலையில், 2014 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த தெலுங்கு தேசம் கட்சியின் நம்பிக்கையையும் மத்திய அரசு தவிடுபொடியாக்கியது. ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டதால், மத்திய பா.ஜ., அரசிலிருந்து விலக தெலுங்குதேச கட்சி முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அக்கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கஜபதி ராஜூ, ஓய்எஸ். சவுத்ரி ஆகியோர் இன்று ராஜினாமா செய்வார்கள் என அக்கட்சி அறிவித்தது.
ஆனால், இதற்கு பதிலடியாக ஆந்திர அரசில் இடம்பெற்றிருந்த பா.ஜ., அமைச்சர்கள் 2 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதற்கிடையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். எனினும் இந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் தான் முடிந்துள்ளது.
ஏனெனில், பதவி விலக உள்ள தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மாலை 6 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்பொழுது தங்களது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடியிடம் வழங்கியுள்ளனர்.