March 8, 2018
தண்டோரா குழு
24 மணி நேரமும் பணியில் இருக்கும் போலீசாருக்கு ஓய்வு தேவை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசாரின் மன அழுத்தம் தொடர்பாக வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசார் 24 மணி நேரம் வேலை நிறுத்தம் செய்தால் தமிழகத்தின் நிலை என்னவாகும்? 24 மணி நேரமும் பணியில் இருக்கும் போலீசாருக்கு ஓய்வு தேவை. குடும்ப விழா, பண்டிகைகளின் போது விடுமுறை கிடைப்பதில்லை. காவல்துறையினர் ஒரு மணி நேரம் வேலைநிறுத்தம் செய்தால் தமிழகத்தின் நிலை என்ன ஆகும்? போலீஸ் துறையில் 19 ஆயிரம் இடங்கள் காலி என பத்திரிகைகளில் வெளியான தகவல் உண்மையா? மன அழுத்தம் காரணமாக சிலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்கின்றனர். தற்கொலைக்கு ஆளாகின்றனர். தேவையில்லாமல் காலி பங்களாக்களிலும், சமாதியிலும் பணி அமர்த்தப்படுகின்றனர். அமைச்சர்கள், அதிகாரிகள் சாலையில் செல்லும் போது கால்கடுக்க நிற்க வைக்கப்படுகிறார்கள். மனித உரிமை செயல்களில் ஈடுபட்டாலும் போலீசாரின் மன நிலையை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
காவலர்களுக்கான பணி ஓய்வு தொடர்பாக 2012-ல் பிறப்பிக்கப்பட்ட ஆணையை ஏன் செயல்படுத்தவில்லை? என்று கேள்வி எழுப்பிய அவர் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வருகிற 19-க்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.