March 5, 2018 தண்டோரா குழு
கோவை உடையாம்பாளையம் பகுதியிலுள்ள அட்வைத் மெட்ரிக் பள்ளி வளாகம் சுற்றியுள்ள முட்புதர்கள் நிரம்பியுள்ள காலி மைதானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.
கோவை உடையாம்பாளையம் பகுதியிலுள்ள அட்வைத் மெட்ரிக் பள்ளியை சுற்றிலும் சுமார் நூற்றைம்பது ஏக்கர் பரப்பளவிலான காலி நிலம் உள்ளது.அங்கு ஏராளமான முட்புதர்கள் காணப்படும் நிலையில் அங்கு இன்று பிற்பகலில் திடீரென தீ பற்றியுள்ளது.
தொடர்ந்து அனைத்து பகுதியிலும் தீ பரவியதால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.மேலும் பள்ளி வளாகம் வரை பரவிய தீ சுற்றுச்சுவர் இருந்ததால் பள்ளிக்குள் பரவவில்லை.ஆனால் வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள தென்னை மரங்களிலும் மற்ற மரங்களிலும் தீ பற்றி எரிந்தது.இதனால் பள்ளிக்கு விடுமுறை அளித்த நிர்வாகம் மாணவ மாணவிகளை வாகனங்கள் மூலம் அனுப்பியதுடன் பள்ளிக்குள் தீ பரவாமல் தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டது.
அதே வேளையில் பொதுமக்களின் தகவலின் பேரில் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் சுமார் அரை மணி நேரத்திற்கு பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
மேலும்,அப்பகுதி குடியிருப்புவாசிகளும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த சில தினங்களாக கோவையில் சராசரியாக 35 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கடுமையான வெயில் இருந்து வருவதால் வேகமாக பரவி வரும் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.அதே வேளையில் சுமார் மூன்று மணி நேரமாக கடுமையாக தீ பரவி வரும் சூழலில் தீயணைப்பு துறையினர் மெத்தனமாக செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.