February 27, 2018
தண்டோரா குழு
சட்ட நடைமுறைகளைச் செய்து முடித்து ஸ்ரீதேவியின் உடலை மும்பைக்குத் திருப்பி அனுப்புவதற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம் என ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்தியத் தூதர் நவ்தீப் சூரி தெரிவித்துள்ளார்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஸ்ரீதேவி துபாயில் குளியறையில் இருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் அவரது உடல் இந்தியாவிற்கு எப்போது கொண்டுவரப்படும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்தியத் தூதர் நவ்தீப் சூரி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ஸ்ரீதேவியின் மறைவு தொடர்பான செய்தியில் ஊடகங்கள் காட்டும் ஆர்வத்தை புரிந்து கொள்ள முடிகிறது.என்னால் முடிந்தவரை விரைவில் உடலை அனுப்புவதற்கு துபாய் அதிகாரிகளுடன் தான் முயற்சி செய்து வருவதாகவும், இதேபோன்ற மற்ற நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது உடலை மும்பைக்கு அனுப்புவதற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஸ்ரீதேவி குடும்பத்தினருடனும் அவருடைய நலம் விரும்பிகளுடனும் தான் எப்போதும் தொடர்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.