February 26, 2018
தண்டோரா குழு
துபாயில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செனற பிரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் மாரடைப்பால் காலமானார். அவரது கடைசி நிமிடங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி(54). கடந்த வாரம் ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூர், மகள் குஷி கபூருடன் ராஸ் அல் காய்மா பகுதியில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். திருமணம் முடிந்ததும் போனி கபூர் மட்டும் மும்பை திரும்பி உள்ளார். இதற்கிடையில், ஸ்ரீதேவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த போனி கபூர், ஸ்ரீதேவிக்கு தெரிவிக்காமல் சனிக்கிழமை மீண்டும் துபாய் திரும்பி உள்ளார்.
அவர் துபாய்யில் ஸ்ரீ தேவி தங்கி இருந்த ஜூமெயராஹ் எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலுக்கு மாலை 5:30மணிக்கு சென்று தூங்கிக்கொண்டிருந்த ஸ்ரீ தேவியை எழுப்பி 15 நிமிடம் பேசிக்கொண்டிருந்தார். அதன் பின்னர் இரவு விருந்திற்காக ஸ்ரீதேவியை அழைத்துள்ளார். இதனையடுத்து, குளியலறைக்கு சென்ற ஸ்ரீதேவி வெகு நேரமாகியும் திரும்பவில்லை. அவர் கதவை திறக்காததால், கதவை உடைத்து போனி கபூர் உள்ளே சென்ற போது, அங்கு ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மயங்கி கிடந்துள்ளார். இது தொடர்பாக டாக்டர்கள் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் ஸ்ரீ தேவி இறந்ததை உறுதி செய்தனர். மேலும், அவரை மருத்துவமனைக்கு எடுத்து சென்று பரிசோதனை செய்ததில் அவர் மாரடைப்பால் இறந்தது உறுதி செய்யப்பட்டது.