February 26, 2018
தண்டோரா குழு
ஐ.ஐ.டியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டிய அவசியம் இல்லை என பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஐ.ஐ.டி.யில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை ஐ.ஐ.டி.யுடன் தேசிய துறைமுகம், நீர்வழிப்பாதை, கடற்கரை தொழில்நுட்பத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இவ்விழாவில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய கப்பல் போக்குவர்த்து துறை அமைச்சா் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் எந்தவொரு அரசு நிகழ்ச்சி தொடங்கும் போது தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுவது வழக்கம். ஆனால் இன்று நடைபெற்ற விழாவில் தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் கணபதி பாடலை மாணவா்கள் சிலா் பாடினா். மத்திய அமைச்சா் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்படாமல் இருந்தது பெரும் சா்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், இது தொடா்பாக கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க. எம்.பி.யும், மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சென்னை ஐ.ஐ.டி.யில் தமிழ்தாய் வாழ்த்து பாட வேண்டிய அவசியம் இல்லை. தமிழக அரசின் நிகழ்ச்சிகளில் தான் தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடவேண்டும். நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றி உருவாக்கப்பட்டது தான் சென்னை ஐ.ஐ.டி. என்று அவா் தெரிவித்துள்ளார்.