February 24, 2018
தண்டோரா குழு
கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனையில் முதன்முறையாக நடமாடும் பக்கவாத சிகிச்சை மையம் கொண்ட ஆம்புலன்ஸ் திட்டமானது இன்று(பிப் 24)அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கே.எம்.சி.எச் மருத்துவமனையின் பக்கவாத சேவை மையம் ஆசியாவிலேயே முதன்முறையாக நடமாடும் பக்கவாத சிகிச்சை மையம் கொண்ட ஆம்புலன்ஸ் திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி, கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பக்கவாத பாதிப்பு ஏற்படும் போது மூன்று மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற நிலையில்,இந்த நடமாடும் பக்கவாத சிகிச்சை மையம் கொண்ட ஆம்புலன்ஸில் சிகிச்சைக்கு தேவையான சி.டி ஸ்கேன் வசதி உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவ வல்லுனர்களுடன் தொடர்பில் இருக்கும் படியான வசதிகளும், சிடி ஸ்கேன் உள்ளிட்டவற்றின் முடிவுகளை பறிமாறிக்கொள்வதற்கான வசதிகளும் வடிவமைக்கபட்டுள்ளது.
மேலும் அனுபவம் வாய்ந்த மருத்துவர், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களும் இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் பணியமர்த்தப்பட்டு இருப்பதால் பக்கவாத பாதிப்பு பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்ற முடியும்.