February 23, 2018
தண்டோரா குழு
கோவையில் கலப்பட வேப்பம் புண்ணாக்கு விவகாரத்தில்,தவறான ஆய்வக அறிக்கை வழங்கிய அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினர்.
கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் இன்று(பிப்23)மாதந்திர விவசாயகூட்டம் நடைபெற்றது.
கோவை இடிகரையை சேர்ந்தவர் விவசாயிகள் துடியலூரிலுள்ள கூட்டுறவு விவசாய சங்கம் மூலமாக வேப்பம் புண்ணாக்கு மூட்டைகளை வாங்கியுள்ளனர். அதில் மரத்தூள், காப்பிக்கொட்டை பொட்டு, களிமண் உருண்டை உள்ளிட்டவை கலந்திருந்தன.
இதையடுத்து கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கம் மூலமாக,கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.விவசாய சங்கம் சார்பில் வேப்பம் புண்ணாக்கை, தயாரித்த ஆலையிலிருந்து, மாதிரிகளை பெற்று, கோவையிலுள்ள அங்கக பரிசோதனை நிலையத்துக்கு ஆய்வுக்கு அனுப்பினர்.அந்த வேப்பம் புண்ணாக்கு தரமானது என, ஆய்வக அதிகாரிகள் அறிக்கை வழங்கியுள்ளனர்.
இதனிடையே தமிழக அரசின் தொழில்துறை கட்டுப்பாட்டிலுள்ள, ஆய்வகத்துக்கும்,விவசாயிகள் சங்கம் சார்பில் வேப்பம் புண்ணாக்கை ஆய்வுக்கு அனுப்பினோம்.அதில், வேப்பம்புண்ணாக்கு தரமற்றது என, ஆய்வறிக்கை வழங்கப்பட்டுள்ளது.அதே மாதிரியை மீண்டும், கோவையிலுள்ள அங்கக பரிசோதனை மையத்துக்கு அனுப்பியபோது, ‘தரமானது தான்’ என, ஆய்வறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இருவேறு அறிக்கைகள் வந்ததால், சென்னையிலுள்ள வேளாண் இயக்குனர் அலுவலகத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.பின், வேளாண்துறை சார்பில், திருச்சியில் உள்ள அங்கக உர பரிசோதனை ஆய்வகத்துக்கு, அந்த வேப்பம்புண்ணாக்கை ஆய்வுக்கு அனுப்பினார்கள்.அதில் வேப்பம் புண்ணாக்கு தரம் குறைவாக இருப்பதாக அறிக்கை வந்துள்ளது.
இது தொடர்பாக வேளாண் இயக்குனர் சார்பில், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அதில், தரம் குறைவான வேப்பம் புண்ணாக்கை விற்பனை செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறும், மாநிலம் முழுவதும் வேப்பம் புண்ணாக்கு விற்பனை மற்றும் தயாரிப்பை கண்காணித்து, தரத்தை உறுதி செய்யுமாறும் வேளாண் இணை இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது,
கோவையில் உள்ள ஆய்வகத்தில் வேப்பம் புண்ணாக்கை பரிசோதித்த போது, தரமாக உள்ளதாக, தவறான தகவல் தெரிவித்துள்ளனர். அதே வேப்பம் புண்ணாக்கை திருச்சியில் ஆய்வு செய்தபோது தரமற்றது என தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி வேளாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் சம்பந்தப்பட்ட கோவை ஆய்வக அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளின் உயிர் பிரச்னையில், இது போன்ற தவறான ஆய்வக அறிக்கைகளை வெளியிடுவதை எக்காரணம் கொண்டும் ஏற்கமுடியாது. எனவே இந்த விவகாரத்தில் நீதிவிசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும்,இன்று நடந்து கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் விவசாயிகள் வேப்பம் புண்ணாக்கை பை எடுத்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மாதிரி எடுக்க வலியுறுத்தினார்கள் .அதிகாரிகள் மறுத்தால் விவசாயிகள் அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மாதிரி எடுக்கப்பட்டு உரிய விசாரனை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.