February 21, 2018
தண்டோரா குழு
மதுரை மாநகராட்சி கடைகளுக்கான வாடகை உயர்வை ரத்து செய்யக்கோரிய மு.க.அழகிரியின்மனுவைஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,” மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான பாரதியார் வணிக வளாகத்தில் (பெரியார் காம்ப்ளக்ஸ் பஸ் நிலையம்) உள்ள கடைகளில் 3 கடைகளை குத்தகை எடுத்துள்ளேன். ஒவ்வொரு கடைக்கும் மாதம் 10565 வாடகை செலுத்துகிறேன். இந்த கடைகளின் வாடகையை ரூ.13358- ஆக உயர்த்தி மாநகராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்த தவறினால் கடை பொது ஏலம் நடத்தி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 2007-ல் வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளின் கடைகளின் குத்தகை காலம் 3 ஆண்டுக்கு ஒரு முறை 15 சதவீத வாடகை உயர்வுடன் நீட்டிக்கப்படும். 9 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வாடகை நிர்ணயம் செய்து ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நபர்களுக்கே கடைகளை திரும்ப ஒதுக்கலாம்.இந்த அரசாணைக்கு எதிராக வாடகையை மாநகராட்சி உயர்த்தியுள்ளது.
வாடகை உயர்த்துவதற்கு முன்பு குத்தகைதாரர்களிடம் கருத்து கேட்க வேண்டும். அதன் பிறகே வாடகை உயர்வு தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றாமல் திடீரென வாடகையை உயர்த்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.பொதுப்பணித்துறை கட்டணம், சந்தை மதிப்பு, கட்டிடத்தி்ன் மதிப்பு, நிலத்தின் மதிப்பு அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதியார் வணிக வளாகம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கட்டிட சேதத்தை கணக்கில் கொண்டு வாடகை கட்டணத்தில் குறைப்பு செய்யவில்லை. கட்டிடத்தின் மதிப்பு, நிலத்தின் மதிப்பு சரியாக நிர்ணயம் செய்யப்படவில்லை.எனவே வாடகை உயர்வு தொடர்பாக மாநராட்சி ஆணையர் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும். அதுவரை அந்த நோட்டீஸை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மேலும் 20 கடைகளின் வாடகை உயர்வுக்கு எதிராக அந்த கடைகளின் குத்தகைதாரர்களும் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுக்கள் மீது நீதிபதி பாரதிதாசன் முன்னையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ” மாநகராட்சி உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்துவதற்கு குத்தகைதாரர்கள் சம்மதம் தெரிவித்தால் அவர்களுக்கான குத்தகை காலத்தை நீட்டிக்கலாம். கட்டண உயர்வை ஏற்க மறுத்தால் கடைகளை காலி செய்து பொது ஏலம் மூலம் கடைகளை ஒதுக்கீடு செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.