February 21, 2018
தண்டோரா குழு
ஏர்செல் செல்போன் நிறுவன சேவை கிடைக்கவில்லை என்று கூறி தமிழகம் முழுவதும அந்நிறுவன வாடிக்கையாளர் சேவை மையங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏர்செல் தொலைத்தொடர்பு சேவையில் சிக்கல் இருப்பதாகவும், தொடர்பு கொள்வதில் பிரச்னை உள்ளதாகவும் பலர் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஏர்செல் நெட்வொர்க் இயங்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது. இதற்கு, ஏர்செல் நிறுவனத்தின் உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்னையே காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை, கோவை,ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி, வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏர்செல் சேவை முடக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சேவை மையத்துக்குச் சென்று ஊழியர்களிடம் விளக்கம் கேட்டனர். ஏர்செல்லின் சேவைக் குறைபாட்டால் தங்களின் வணிகம் முடங்கியுள்ளதாகவும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறைகூறினர். செல்பேசி சேவை கிடைக்காததற்கான காரணம் பற்றித் தங்களுக்கே நிறுவனம் தெரிவிக்கவில்லை என்றும், 3நாட்களுக்குப் பொறுத்திருக்குமாறும் அலுவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஏர்செல் செல்போன் இணைப்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், கோவை அண்ணாசிலை பகுதியில் உள்ள ஏர்செல் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டுள்ளனர்.