February 21, 2018
தண்டோரா குழு
கோவை ஆத்துப்பாலம்,உக்கடம் வழியாக ஒப்பணக்கார வீதி வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டக்கூடிய பணிகளை ஏற்கனவே அரசினால் வெளியிடப்பட்ட வரைபடங்களை மாற்றி அமைத்து கட்டக்கூடாது என சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கேரளா மற்றும் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் கோவைக்கு லட்சக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இரண்டு சாலைகளும் சந்திக்கும் இடமான ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து ஒப்பணக்கார வீதி வரை மேம்பாலம் கட்ட அரசு திட்டமிட்டிருந்தது.
ஆனால் தற்போதையை அரசு தேர்தலை மனதில் வைத்து மக்களுக்கு பயன்படாத வகையில் கரும்புக்கடை பகுதியில் இருந்து ஒப்பணக்கார வீதி வரை மேம்பாலம் கட்ட முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
காந்திபுரத்தில் ஏற்கனவே திட்டமிட்ட மேம்பால வரைபடத்தை மாற்றி வேறுமாதிரி கட்டியதால் தற்போது காந்திபுரம் மேம்பாலம் பயனற்று கிடக்கிறது.அதனால் இந்த மேம்பாலத்திற்கான வரைபடத்தை மாற்றாமல் செயல்படுத்தினால் தான் மக்களுக்கு பயன்பெறும் அதே வேளையில் பெருமளவிலான போக்குவரத்தையும் குறைக்க முடியும் என கோரிக்கை விடுத்துள்ளார்.