February 20, 2018
தண்டோரா குழு
இந்தியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து மூன்று நாடுகளுக்கிடையேயான பாரா ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டியில் உட்கார்ந்து விளையாடும் கைப்பந்து போட்டியில் விளையாட இருக்கும் கோவையை சேர்ந்த இருவருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நிதியுதவி வழங்கவுள்ளார்.
உலகில் மாற்றுத்திறனாளிகளை தன்னம்பிக்கையோடு பார்க்க வைத்தது பாரா ஒலிம்பிக் போட்டிகள் தான் என்றால் மிகையாகாது.சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் 2016 ஆம் ஆண்டு உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றதை அடுத்து உலகமே மாற்றுத்திறனாளிகளை வியந்து பார்க்க ஆரம்பித்திருக்கிறது. திறமை இருந்தால் உலகம் போற்றும் என்பதற்கு மாரியப்பன் தங்கவேல் உதாரணம்.
இந்நிலையில் கோவையைச்சேர்ந்த ராஜீ மற்றும் மோகன்குமார் தாய்லாந்தில் நடக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில் உட்கார்ந்து கைப்பந்து விளையாடும் போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
ராஜீவிற்கு கல்யாணம் ஆகி இருபது ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், இரு குழந்தைகள் இருப்பதாகவும், டிவி மெக்கானிக்காக பணிபுரிந்து வருவதாக தெரிவித்தார். மோகன் குமார் ஆவீன் பாலகத்தை சரவணம்பட்டி பகுதியில் வைத்து நடத்தி வருகிறார். திருமணமாகி ஒராண்டு ஆனதாக தெரிவித்தார்.வெள்ளக்கிணர் பகுதியில் வசித்து வரும் இவர்கள் இருவரும் நண்பர்கள்.
போலியோ பாதிப்பில் மாற்றுத்திறனாளிகளான இருவரும் மனம் தளராமல் கடின பயிற்சி மேற்கொண்டதன் விளைவாக தேசிய அளவில் ராஜஸ்தானில் நடந்த உட்கார்ந்து கைப்பந்து விளையாடும் போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாடி அணியை வெற்றி பெறச்செய்தனர். அதில் இவர்கள் இருவரும் தேசிய அணிக்காக தேர்வு செய்யப்பட்டு தற்போது தாய்லாந்தில் வருகின்ற 23 ஆம் தேதி நடக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
ராஜீ மற்றும் மோகன்குமாரும், ஈட்டி மற்றும் வட்டு, குண்டு எறிதல் போன்ற போட்டிகளில் கலந்துகொணடு மாவட்ட, மாநில,தேசிய அளவில் பல்வேறு பரிசுகளை பெற்றிருக்கிறார்கள்.முதன் முதலாக உட்கார்ந்து விளையாடும் கைப்பந்து விளையாட்டில் இந்தியா சார்பில் இந்தியா ஸ்ரீலங்கா,தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகள் கலந்து கொள்ளும் போட்டி பாங்காங்கில் நடைபெறும் போட்டியில் இருவரும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இவர்களுக்கு கோவை குமரகுரு கல்லூரியில் தினமும் சிறப்பு பயிற்சி அளித்து வருகிறார் உடற்கல்வி இயக்குனர்.மேலும் இந்திய அணிக்காக விளையாட தாய்லாந்து செல்லும் இவர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் தலா 25,000 ரூபாய் கொடுப்பதாக உறுதியளித்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும்,மாற்றுத்திறனாளிகள் சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள அனைத்து உதவிகளையும் அரசு செய்துகொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மேலும் பல வெற்றிகளை பெற முடியும் என்றனர்.