February 19, 2018
தண்டோரா குழு
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை தீர்ப்பை கேட்டு ஹாசினியின் படத்தை பார்த்து அவரது தந்தை கதறி அழுதார்.
தமிழகமே எதிர்பார்த்து இருந்த போரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தஸ்வந்திற்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனையும் 46 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் காலை முதலே காத்திருந்த சிறுமி ஹாசினியின் தந்தை பாபுஉணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார். இதற்கிடையில், தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது தெரிய வந்ததும் தனது செல்போனில் இருந்த சிறுமியின் புகைப்படத்தைப் பார்த்து மன உடைந்து அழத் தொடங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாபு,
தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் மூலம் தனது மகளுக்கு நீதி கிடைத்துள்ளதாகவும் தீர்ப்பு தனக்கு முழு திருப்தி அளிப்பதாகவும் உருக்கத்துடன் கூறினார். மேலும், சிறுமியைக் கொன்றது மட்டுமின்றி பெற்ற தாயையும் கொலை செய்த தஷ்வந்த் மனிதனே அல்ல என்பதால் அவனைப் போன்றவர்கள் உயிருடன் இருக்க தகுதியற்றவர்கள் என பாபு கூறினார்.
மேலும், நீதிமன்றம் சென்றால் தாமதமாகும் என தொடக்கத்தில் அனைவரும் கூறினாலும், தற்போது விரைவாக தீர்ப்பு கிடைத்திருப்பது தனக்கு திருப்தி அளிப்பதாக பாபு தெரிவித்தார்.