February 19, 2018
தண்டோரா குழு
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீது போலீஸ் தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து தமிழக மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள், நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2009ம் ஆண்டு பிப்.19ம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றம் முன்பு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த தாக்குதலில் வழக்கறிஞர்கள் பலர் பலத்த காயமடைந்தனர். இச்சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆண்டுதோறும் பிப்.19ம் தேதியை கருப்பு தினமாக வழக்கறிஞர்கள் அனுசரித்து வருகின்றனர். இந்நாளில் நீதிமன்ற பணிகளையும் புறக்கணித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தாண்டும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள வழக்கறிஞர்கள் பிப்.19ம் தேதி கருப்பு தினமாக அனுசரித்து, நீதிமன்ற பணிகளை புறக்கணித்து தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு,ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் ஒவ்வொரு ஆண்டும் தொடரும் எனவும், தடியடி நடத்திய காவல் துறை அதிகாரிகளுக்கு பணி உயர்வு வழங்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்றனர்.