February 16, 2018
தண்டோரா குழு
லஞ்ச புகார் வழக்கில் கைதான கோவை பாரதியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு மார்ச் 2 வரை நீதிமன்றக் காவல் அளித்து கோவை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதவி பேராசிரியர் பணிக்கு 30 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கோவை பல்கலை துணைவேந்தராக இருந்த கணபதி மற்றும் உதவி செய்ததாக தர்மராஜ்ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், 4 நாட்கள் விசாரணை முடிந்ததையடுத்து கணபதி கோவை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் வினோ முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதி, போலீசார் உடல்ரீதியாக துன்புறுத்தினார்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கணபதி போலீசார் தன்னை உடல்ரீதியாக துன்புறுத்தவில்லை என்றும் மன ரீதியாக துன்புறுத்தினார்கள் என்றும் கூறினார். இதுமட்டுமன்றி தன்னை கட்டாயப்படுத்தி போலீசார் வாக்குமூலத்தில் கையெழுத்து வாங்கியதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து,கணபதியையும், தர்மராஜூவையும் மார்ச் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.