February 15, 2018
தண்டோரா குழு
கேரளாவில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என கேரளாவிடம் இருந்து கோரிக்கை வந்து உள்ளது என மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் தேகன்பூரில் ஜனவரி மாதம் டிஜிபிக்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் இவ்விகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு உள்ளது. கேரள போலீஸ் கமிஷ்னர் லோகநாத் பெகேரா, மாநிலத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் வளர்ச்சி மற்றும் செயல்பாடு தொடர்பாக விரிவான அறிக்கையை வழங்கி உள்ளார். மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்புத் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
மேலும், “பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என கேரளா தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது, அதுகுறித்து நாங்கள் விசாரிக்கிறோம்,” என மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
“பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கண்காணிப்பின் கீழ் உள்ளது, ஆனால் இதுவரையில் தடை விதிக்கப்படவில்லை. முந்தைய காலகட்டங்களில், சிமி மற்றும் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் மீதும் இதுபோன்ற புகார்கள் தெரிவிக்கப்பட்ட போது மாநில காவல்துறை டிஜிபிக்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது, அதற்கு பின்னர் தடை செய்யப்பட்டது,”என உள்துறை அதிகாரி கூறிஉள்ளார்.