January 29, 2018
தண்டோரா குழு
மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கும் விவகாரத்தில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரீனாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. இதற்கிடையில், ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அம்மனுவை விசாரித்தஉயர்நீதிமன்றம், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து, தலைமைச் செயலாளர் சார்பில் இன்று உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில், ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைப்பது, கடலோர ஒழுங்குமுறை விதிகளுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டு தவறானது.
கடலோர ஒழுங்குமுறை விதிகள் 1991ஆம் ஆண்டு தான் கொண்டுவரப்பட்டது என்றும், அதற்கு முன்னதாகவே, எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டதாகவும் எம்.ஜி.ஆரின் நினைவிட வளாகத்திலேயே ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படுவதால், எந்த விதிமீறலும் இல்லை என்றும், டிராபிக் ராமசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தலைமைச் செயலாளரின் பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த பதில் மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன் விசாரணைக்கு வரவுள்ளது.