January 26, 2018
தண்டோரா குழு
சென்னையில் போக்குவரத்து காவலர்கள் தகாத வார்த்தைகளால் பேசியதால் மனம் உடைந்து தீக்குளித்த கால் டாக்சி ஓட்டுநர் மணிகண்டன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் ஆயள்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், சென்னை தாம்பரத்தில் தங்கி வாடகை கார் ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் தரமணி பகுதியில் காரில் சென்ற அவர், சீட் பெல்ட் அணியவில்லை என போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதனால், போலீசாருக்கு மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, மணிகண்டனையும், அவரது குடும்ப பெண்களையும் போலீசார் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த மணிகண்டன், பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதையடுத்து, பலத்த தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் தொடர்ந்து சிசிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு மணிகண்டனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு, மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது. இதனால் உடல்நிலை மோசமாகி, இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மணிகண்டன் உயிரிழந்த தகவல் கேட்ட அவரது தாயார் வசந்தா, சகோதரிகள் மருத்துவமனை வளாகத்தில் அழுது துடித்தனர்.
முன்னதாக மணிகண்டனை தகாத வார்த்தைகளால் பேசியதாக புகாருக்கு ஆளான போக்குவரத்து உதவி ஆய்வாளர் தாமரைச்செல்வனை பணியிடைநீக்கம் செய்து, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.