January 24, 2018
தண்டோரா குழு
கடவுள் வாழ்த்து பாடல்களுக்கு அனைத்து தருணங்களிலும் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
சென்னையில் பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்-சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், காஞ்சி விஜயேந்திரர், எச்.ராஜா, சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கிடையில், நூல் அகராதி வெளியீட்டு விழாவின் துவக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
அப்போது, மேடையில் இருந்த ஆளுநர் பன்வாரிலால் உட்பட அனைவருமே எழுந்து நின்றனர். ஆனால் காஞ்சி சங்கரமடத்தின் இளைய மடாதிபதியான விஜயேந்திரர் மட்டும் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்காமல் தனது இருக்கையிலேயே அமர்ந்திருந்தார். ஆனால், விழாவின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது மட்டும் விஜயேந்திரர் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்றார். இதனால்,விஜயேந்திரருக்கு அரசியல் தலைவர்கள்,தமிழ் ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி, சமூக வலைத்தளங்களில் விஜயேந்திரரின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.இந்நிலையில்,கடவுள் வாழ்த்து பாடல்களுக்கு அனைத்து தருணங்களிலும் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை. பீடாதிபதிகள் எவ்வாறு மரியாதை செய்வார்களோ அந்த முறையில் மரியாதை செலுத்தினார் என்றும் வைரமுத்து விவகாரத்தை திசைதிருப்பவே இதை பெரிதாக்குகின்றனர் என்றும் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.