• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்த கணவர்

January 17, 2018 தண்டோரா

சென்னையில் கணவன் மதுவுக்கு அடிமையானதால், மனைவி நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்த கணவன் துக்கம் தாளாமல் மனைவி அருகேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை திருவொற்றியூர், இந்திரா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (32). வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (28). இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு கிஷோர் (5), பிரஷீத் (2) என்ற மகன்கள் உள்ளனர். கிஷோர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார்.

சுரேஷ் வெல்டிங் தொழில் செய்து வந்ததால், உடல் சோர்வை போக்க தினமும் குடித்துவிட்டு வருவது வழக்கமாம். மது அருந்துவதால்  குழந்தைகளின் படிப்பு மற்றும் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்கமால் இருந்துள்ளார். இதனால் தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சுரேஷ், ‘‘நான் இனிமேல் சத்தியமாக குடிக்க மாட்டேன். இந்த குடியால் எல்லா சந்தோஷத்தையும் குடும்பத்தில் இழக்கிறேன். மகன்களின் எதிர்காலம் கருதி குடியை மறந்து விடுகிறேன்’’ என மனைவி சங்கீதாவிடம் சத்தியம் செய்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 13ம் தேதி சுரேஷ் தனது நண்பர்களுடன் ஒரு இறுதி சடங்கில் பங்கேற்று உள்ளார். அப்போது, சுரேஷை அவரது நண்பர்கள் மது அருந்த வற்புறுத்தி உள்ளனர். எனினும் சுரேஷ் குடிக்காமல் இருந்துள்ளார். இருப்பினும் நண்பர்களின் தொடர் வற்புறுத்தலால், சுரேஷ் மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

சுரேஷ் குடித்து வந்ததை பார்த்து
மனமுடைந்து சங்கீதா, ‘‘குடிக்க மாட்டேன் என சத்தியம் பன்னிட்டு இப்படி வந்திருக்கிறீயே.. இப்படியே இருந்தால் எப்படி குடும்பம் நடத்துறது.
என சுரேஷிடம் கேட்டுள்ளார். இருவருக்கும் இடையே கடும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் விரக்தியடைந்த சங்கீதா குழந்தைகளுடன் சாப்பிட்டுவிட்டு தூங்கி உள்ளார். சுரேஷூம் சாப்பிட்டுவிட்டு தூங்கி உள்ளார்.

நள்ளிரவில் காற்று வராததுபோல் இருந்ததால், சுரேஷ் எழுந்துள்ளார். அப்போது, அறையில் இருந்த மின்விசிறியில் சங்கீதா தூக்கில் சடலமாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சுரேஷ், மனைவி சாவுக்கு நான் காரணமாகி விட்டேனே என வருந்தி உள்ளார். காதல் திருமணம் என்பதாலும், மனைவி மேல் அளவுக்கு அதிகமாக சுரேஷ் பாசமாக இருந்ததாலும், அவருடைய சேலையிலேயே மனைவி அருகில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிகாலை தூக்கத்தில் இருந்து எழுந்த 2 குழந்தைகளும் தந்தை, தாய் இருவரும் அருகருகே தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து அலறினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன், மனைவி தூக்கில் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, இதுகுறித்து திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரின் சடலங்களையும் கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சமீப காலமாக பெற்றோர் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து கொண்டே போகிறது. இதற்கு முக்கிய காரணம் பிரச்னைகளை கையாள துணிச்சல் இல்லாமல் நிமிடத்தில் எடுக்கும் முடிவு இந்த சோகத்துக்கு செல்கிறது. எனவே, பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க, தம்பதியினருக்கு கவுன்சலிங் கொடுக்கவும், விழிப்புணர்வு நடத்தவும் அரசு முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க