January 10, 2018
தண்டோரா குழு
நேபாளில் மாதவிடாய் காலத்தில் தனியே தங்கவைக்கப்பட்ட பெண்,உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் உள்ள பல சமூகங்களில் பெண்களை மாதவிடாய் காலத்தில்,தூய்மையற்றவர்களாக
கருதுகின்றனர்.அந்த நேரத்தில் பெண்கள் தங்கள் வீடுகளை விட்டு, காட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிசையில் தனியே தங்க வேண்டும்.அவர்கள் தங்கும் அந்த குடிசைக்கு ‘சவுப்படி’ என்று பெயர்.
இந்நிலையில், நேபாள் நாட்டின் அகும்பில் மாவட்டத்தை சேர்ந்தவர் கவுரி பைக்(21) மாதவிடாய் காரணமாக ‘சவுப்படி’யில் தனியே தங்கியிருந்தார்.அப்போது குளிர் காய்வதற்காக, அவர் நெருப்பூட்டி உள்ளார். அந்த நெருப்பின் புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தார்.
இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. தகவல் அறிந்த அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, கவுரியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 2005ம் ஆண்டு முதல் இந்த முறை தடை செய்யப்பட்டது.இருப்பினும், நேபாளத்தின் தொலைதூர பகுதிகளில் இந்த பழக்கம் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது.