January 2, 2018
tamilsamyam.com
ஒருநாள் கிரிக்கெட்டில் முச்சதம் அடிப்பதே தனது இலக்கு என இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 5ல் கேப்டவுனில் துவங்குகிறது.
இத்தொடருக்காக இந்திய அணி வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டைசதம் விளாசி உலக சாதனை படைத்த இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா, முச்சதம் அடிப்பது சாத்தியமே என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில்,
“தற்போதுள்ள சூழ்நிலையில் ஒருநாள் போட்டியில் எதுவும் சாத்தியம் தான். நான் 264 ரன்கள் அடித்த போது வெறும் 36 ரன்களில் 300 ரன்கள் எட்ட முடியாமல் போனது. ஆனால் 264 ரன்கள் சாத்தியமாகும் போது ஏன் 300 ரன்கள் சாத்தியமில்லையா? தொடர்ந்து டி-20 அரங்கில் அதிவேக சதம்விளாசிய போது அனைவரும் டி-20 அரங்கில் 200 ரன்கள் சாத்தியமா என சிந்திக்க துவங்கினர். அதனால் தற்போதைய கிரிக்கெட்டில் எல்லாத்துக்கும் சாத்தியம் தான். உங்கள் நாளாக அது அமையும்பட்சத்தில் எதையும் சாதிக்கலாம்.” என்றார்.