December 19, 2017
தண்டோரா குழு
கோவையில் சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு புலியகுளம் பகுதியிலுள்ள லோக நாயக சனீஸ்வர பகவான் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி சனீஸ்வர பகவானை வழிபட்டனர்.
சனீஸ்வர பகவான் ஆண்டுதோறும் ஒவ்வொரு ராசியிலிருந்தும் வேறு ராசிக்கு இடம் பெயர்ந்து வருவதாக ஐதீகம்.அதன்படி இன்று சனிப்பெயர்ச்சி என்பதால் அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள லோக நாயக சனீஸ்வர பகவான் கோவிலில் இரும்பு எஃகினால் சுமார் ஏழரை அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள சனீஸ்வர பகவானுக்கு பல்வேறு வகை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.இதனைத்தொடர்ந்து யாக வேள்விகள் வளர்க்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் தீபமேற்றி சனீஸ்வர பகவானை வழிபட்டனர்.சனி பகவானுக்கு இரும்பு எஃகினால் சிலை வைக்கப்பட்டுள்ளது கோவையில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.