November 30, 2017
தண்டோரா குழு
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பன்னீர்செல்வம் அணி சார்பில் கட்சியின் அவைத்தலைவர், மதுசூதனன் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். அதேசமயம் முதல்வர் பழனிசாமி தரப்பில், சீட் கேட்டு, பலர் நெருக்கடி கொடுத்தனர். இதனால், முதன்முறையாக இடைத்தேர்தலுக்கு, கட்சியினரிடம் இருந்து விருப்ப மனு வாங்கப்பட்டது. அப்போது, அமைச்சர் ஜெயக்குமாரின் தீவிர ஆதரவாளர்களான பாலகங்கா, கோகுலஇந்திரா உட்பட மொத்தம் 27 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், ஆர்கே நகர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக சென்னையில் அதிமுக ஆட்சிமன்றக் குழு கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், வளர்மதி, மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர். அதிமுக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் மதுசூதனன் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான மதுசூதனனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் இருந்து பாதியிலேயே பாலகங்கா வெளியேறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.