May 15, 2016
வெங்கி சதீஷ்
சுதந்திர இந்தியாவில் இது வரை பல கட்சிகள் ஆட்சி செய்திருந்தாலும் இன்னமும் ஒருசில இடங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத அரசைத்தான் நாம் பார்த்து வருகிறோம். குறிப்பாக மலைக் கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்க முடியாத நிலையில் தான் அரசு உள்ளது.
அதே சமயம் இன்னமும் பல மலைக் கிராமங்களில் அடிப்படை வசதிக்காக சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதோடு, ஒவ்வொரு தேர்தலின் போதும் கருப்புக்கொடி ஏற்றுவது, தேர்தல் புறக்கணிப்பு என கோசங்கள் எழுப்புவது என்ற போராட்டம் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவிர்காக கொடுக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் மைய இயந்திரம் ஆகியவற்றை நாமக்கல் மாவட்டம் போதைமலை பகுதிக்கு சென்ற தேர்தல் பணியாளர்கள் தலையில் வைத்துத் தூக்கிச் சென்ற காட்சியை பார்க்கமுடிந்தது.
அதோடு தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொட்டக்குடி, குரங்கணி, கொழுக்குமலை, ஊத்துக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாக்குப் பெட்டிகளை குதிரை மீது வைத்து சென்றுள்ளனர். இது இன்னமும் அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதியை செய்து தரவில்லை என்பதையே காட்டுகிறது. இது குறித்து அப்பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் சிவக்குமார் கூறும்போது, நான் பிறந்தபோது குதிரை மீது வைத்து தூக்கிச்சென்றனர். அதன் பிறகு பல உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களை மக்கள் சந்தித்துள்ளனர் ஆனால் எங்களுக்கு இன்னும் தீர்வு மட்டும் கிடைக்கவில்லை.
இங்குள்ள மக்கள் பலர் பெண்களை மேற்படிப்பிற்கு அனுப்ப மறுத்து வருகின்றனர். இதற்கு காரணம் இந்த வழித்தடம் இல்லாததே ஆகும். இனி அடுத்த தேர்தலிலாவது வாக்குப்பெட்டிகள் சாலை வழியாக வருமா என எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியது தான் என தெரிவித்தார்.