• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு பிராணநாத சுவாமி திருக்கோவில்

May 18, 2017 findmytemple.com

சுவாமி : அருள்மிகு பிராணநாத சுவாமி.

அம்பாள் : அருள்மிகு மங்களாம்பிகை.

மூர்த்தி : விநாயகர், ஆறுமுகர், நடராஜர், பிரம்மா, கஜலட்சுமி, பைரவர், துர்க்கை.

தீர்த்தம் : மங்கள தீர்த்தம்.

தலவிருட்சம் : வெள்ளெருக்கு.

தலச்சிறப்பு :

நவக்கிரகங்களின் தோஷம் நீங்கிய தலம். இத்தலத்தை வழிபட்ட பின்னர் சூரியனார் கோயிலுக்குச் செல்வது மரபு. இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி 11-வது ஞாயிறு இங்கு வந்து வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம், சாமிக்கு நிவேதனம் செய்து சாப்பிட்டால் பெரு வியாதிகள் நீங்கும். மங்களநாயகியின் திருக்கரத்தில் இருக்கும் மாங்கல்ய சரடு பெண்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. மங்காளம்பிகைக்கு 5 வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டால் மாங்கல்ய தோஷம், களத்திர தோஷம் ஆகியவை நீங்கப்பெற்று தீர்க்க சுமங்கலி பிராப்தமும், விரைவில் விவாக பிராப்தமும் கிடைக்க அம்பாள் அருள் புரிவாள். மேலும் இத்திருக்கோவிலில் உள்ள அகத்தீஸ்வரர் லிங்கத்திற்கு அமாவாசை தினத்தில் அபிஷேகம் செய்வதால் பூர்வ ஜன்ம தோஷம், பித்ருக்கள் சாபம் நிவர்த்தி ஆகும்.

தல வரலாறு :

பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், அலைவாணர் என்பவர் அமைச்சராக இருந்தார். அவர் அரசனின் அனுமதி பெறாமல் வரிப் பணத்தை தான் வசிக்கும் திருமங்கலக்குடியில் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்பச் செலவிட்டார். இதை அறிந்த மன்னன் அவரை அழைக்க, அமைச்சரோ மன்னனைக் காண அஞ்சி உயிர் நீத்தார். இறக்கும் போது அவர் தனது மனைவியிடம் “நான் இறந்தவுடன் என் உடலை திருமங்கலக்குடிக்கு எடுத்துச் சென்று அங்கேயே அடக்கமும் செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அவ்வாறு அவரது இறந்த உடலை எடுத்துச் செல்லும்போது, அமைச்சரின் மனைவி இறைவி மங்களாம்பிகையிடம் மாங்கல்ய பாக்கியம் அருளப் பிரார்த்தனை செய்தாள். ஊர் எல்லை அருகே வந்ததும் உயிரற்ற மந்திரியின் உடல் மீண்டும் உயிர் பெற்று எழுந்தது. அனைவரும் திகைத்துப் போய் நிற்க, அமைச்சர் தான் எழுப்பிய சிவபெருமான் ஆலயத்திற்குச் சென்று, “பிராணனைக் கொடுத்த பிராண நாதா” என்று போற்றி வழி பட்டார். அன்று முதல் பிராணனைக் கொடுத்ததால் இறைவன் அருள்மிகு பிராணநாதேஸ்வரர் என்றும், மந்திரியின் மனைவி மாங்கல்யம் பெற்றதால் இத்தல அம்பிகை மாங்கல்யம் கொடுத்த அருள்மிகு மங்களாம்பிகை என்றும் போற்றப்படுகின்றனர். அப்போது அமைச்சரின் மனைவி தங்களுக்குக் காட்சி தந்த பிராணநாதர் மற்றும் மங்களாம்பிகையிடம், “எங்களுக்கு வரம் அளித்தபடி, இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடும் என் போன்ற மற்ற பெண்களுக்கும் மாங்கல்ய பாக்கியம் அருள வேண்டும்” என்று வேண்ட அவ்வாறே அருளினர். அதன்படி மாங்கல்ய தோஷத்தையும் நீக்கி சுமங்கலி பிராப்தம் தந்தருளும் திருத்தலமாக திருமங்கலக்குடி விளங்குகிறது.

வழிபட்டோர் : காளி, சூரியன், திருமால், பிரம்மன், அகத்தியர்.

பாடியோர் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்.

நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் நண்பகல் 11. 30 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8 .30 வரை.

பூஜை விவரம் : நான்கு கால பூஜை.

திருவிழாக்கள் :

பங்குனி உத்திரத்தை ஒட்டி 10 நாட்கள் பெருவிழா,

ஆனி – திருமஞ்சனம்,

மார்கழி – திருவாதிரையில் நடராஜர் உற்சவமும், ஊர்வலமும் நடைபெறும்.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு பிராணநாத சுவாமி திருக்கோவில்,திருமங்கலக்குடி அஞ்சல், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 102.

மேலும் படிக்க