• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்காவின் துப்பாக்கி சூட்டில் இறந்தவர் குடும்பத்தினருக்கு இரங்கல் – சுஷ்மா ஸ்வராஜ்

February 24, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் மதுபான விடுதியில் இந்தியரைச் சுட்டுக்கொன்ற சம்பவம் தனக்கு அதிர்ச்சியை அளிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 24) தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் உள்ள மதுபான விடுதியில் இந்தியப் பொறியாளர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா (32) வியாழக்கிழமை (பிப்ரவரி 23) சுட்டுக் கொல்லப்பட்டார்.

“அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் நடந்த துப்பாக்கி;் சூடு சம்பவத்தில் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா உயிரிழந்த சம்பவம் எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுயிருந்தார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அலோக் மடசானி அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை மருத்துவமனையிலிருந்து மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்துள்ளனர் என்று அமெரிக்க இந்திய தூதர் நவ்தேஜ் ஷர்மா தனக்குத் தகவல் தந்துள்ளதாக சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

மேலும், இந்திய துணை தூதரக அதிகாரி ஆர்.டி. ஜோஷி மற்றும் எச். சிங் ஆகியோர் கன்சாஸ் நகரில் சுடப்பட்டவர்களுக்கு உதவி செய்ய விரைந்துள்ளனர்.

“அமெரிக்க இந்திய தூதர் நவ்தேஜ் சர்மாவுடன் தொடர்புகொண்டு பேசியபோது, இரண்டு இந்திய தூதரக அதிகாரிகள் கன்சாஸ் நகருக்கு விரைந்துள்ளனர் என்று தெரிவித்தார்” என்று சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

உள்ளூர் அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கையில், “மதுபான விடுதியில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குக் காரணமான முன்னாள் கடற்படை வீரர் ஆதாம் புரிண்டன் (51) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்” என்று தெரிவித்தனர்.

காவல் துறை அதிகாரி கூறுகையில்,

“ஜிபிஎஸ் கருவி தயாரிக்கும் கார்மின் சர்வதேச நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வந்த ஸ்ரீநிவாஸ் என்பவரை புரிண்டன் துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய சக ஊழியர் அலோக் மடசானி என்பவர் காயமடைந்தார்” என்றார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில், “துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், ‘என் நாட்டை விட்டு வெளியேறு” என்று புரிண்டன் கோபமாக கத்தினார்” என்றார்.

இந்த துப்பாக்கிச் சூட்டைத் தடுக்க முயன்ற மற்றொரு சக ஊழியர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க