February 21, 2017
தண்டோரா குழு
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு சிறையில் சில சலுகைகள் தரப்பட்டுள்ளன என்று சிறைத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது.
அதில், ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிறையில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசிக்குச் சிறையில் சில சலுகைகள் தரப் பட்டுள்ளன என்று சிறைத் துறை தெரிவித்துள்ளது.
அதையடுத்து சிறையில் ‘பி 2’ பிரிவில் இருக்கும் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்குத் தொலைக்காட்சி, கட்டில், மின்விசிறி மற்றும் செய்தித்தாள் ஆகியவற்றை வழங்க சிறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், “வீட்டு உணவு வேண்டும்” என்ற சசிகலாவின் கோரிக்கையை சிறை நிர்வாகம் இதுவரை ஏற்கவில்லை.
அதேசமயம், சுதாகரனுக்கு இதுவரை எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என்று பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வருமான வரி ஆவணங்களைத் தாக்கல் செய்த சசிகலா தனக்குச் சிறையில் முதல் வகுப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.