• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீர்ப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் – மு.க. ஸ்டாலின்

February 16, 2017

சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு பொதுவாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை நெறிகளுக்கானது என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என தி.மு.க. செயல்தலைவரும், சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

“சொத்துக் குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டு நான்கு வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முதலில் இருந்தே திறமையுடன் வாதாடிய கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறுகையில், “எவ்வளவு பலம் மிக்கவர்களாக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது. தண்டனை அடைந்தே ஆக வேண்டும்” என்றார். அவர் இந்த வழக்கில் நேர்மையாக வாதாடினார் என்ற ஒரே காரணத்துக்காகப் பல துயரங்களை அனுபவித்தார்.

இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு, பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உறுதி செய்திருக்கிறது.

ஊழல் குற்றவாளிகள் தப்பி விடக்கூடாது என்ற நோக்கில் இந்த வழக்கில் பல சிரமங்களையும், தொல்லைகளையும், பழி வாங்கும் நடவடிக்கைகளையும் தாங்கிக் கொண்டு பணியாற்றிய லஞ்ச ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகளுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

“அரசியலுக்கு வருவோர் மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பான்மையுடன் நேர்மையுடன் செயல்பட முன்வர வேண்டும். ஊழல் செய்து சொத்துக் குவிப்பில் ஈடுபட்டு பேராசைக்காரர்களாக இருக்கக் கூடாது” என்பதற்கு இந்த தீர்ப்பின் மூலம் மிகச்சிறந்த பாடத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

நாளைய சமுதாயமும், நாடும் முன்னேற இந்தத் தீர்ப்பின் வாசகங்களை ஒவ்வொரு அரசியல் தலைவரும், பொதுவாழ்வில் இருப்போரும், பொதுவாழ்வுக்கு வருவோரும் உற்று நோக்க வேண்டும்.
திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் நடத்திய சட்டப் போரில் கிடைத்துள்ள இந்த வெற்றி கொண்டாடுவதற்கானது அல்ல. பொதுவாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை நெறிகளுக்கானது என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட்டு தமிழகத்துக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்ப்போம்”.

இவ்வாறு ஸ்டாலின் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க