June 2, 2026
தண்டோரா குழு
இந்தியாவின் வாகன உற்பத்தி நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் , டிபிஎஸ் வங்கி இந்தியாவுடன் இணைந்து, புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது இந்த ஒப்பந்தத்தின் மூலம், இத்துறையில் முதன்முறையாக ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை’க்கு முக்கியத்துவம் அளிக்கும் வாகன விற்பனையாளர்களுக்கு நிதியுதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முன்முயற்சியானது பயணிகள் மற்றும் வணிக வாகனங்களை வாங்குவதற்கான கடனுதவிகளுக்கு சாதகமான வட்டி விகிதங்களை வழங்குவதன் மூலம், மஹிந்திராவின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் தங்களது வணிகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உகந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய வாகனத் துறையிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் வடிவமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான செயல்திறன் அளவுகோல்களைத் தெளிவாக வரையறுக்கிறது. இதன்படி, மஹிந்திராவின் ‘பசுமை விற்பனையாளர் திட்டத்தின்’ விதிகளுக்கு இணங்க, விற்பனையாளரின் செயல்பாடுகள் பல்வேறு அளவுகோல்களின் கீழ் மதிப்பிடப்படும். இந்த நிதியுதவித் திட்டத்தின் புதிய கட்டமைப்பின் கீழ், விரிவான இஎஸ்ஜி அளவுகோல்களில் டீலர்ஷிப்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்கள் தரவரிசைப்படுத்தப்படுவார்கள்.
இஎஸ்ஜி அளவுகோல்கள் மற்றும் விற்பனை இலக்குகளில் முன்னேற்றம் காட்டும் விற்பனையாளர்களுக்கு வணிக ரீதியான சலுகைகள் மற்றும் வட்டி விகித சலுகைகள் வழங்கப்படும். இந்த அளவுகோல்களை மஹிந்திரா நிறுவனம் மற்றும் இந்த முன்முயற்சிக்கு நிதிச்சேவையை வழங்கும் டிபிஎஸ் வங்கி இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து வடிவமைத்துள்ளன.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் வாகனப் பிரிவு முதன்மைச் செயல் அதிகாரி நலினிகாந்த் கொல்லகுண்டா கூறுகையில்,
“இந்தியா தனது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை முன்னெடுக்கும் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கும் வேளையில், டிபிஎஸ் வங்கி இந்தியாவுடன் இணைந்து இந்தத் திட்டத்தைத் தொடங்குவது மிக பொருத்தமான முன்முயற்சியாக அமைந்திருக்கிறது. சுற்றுச்சூழல் நிலைத்தன்மையில் நீண்டகால அர்ப்பணிப்பைக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம் என்ற வகையில், இந்தியாவின் நிலைத்தன்மை லட்சியங்களை ஆதரிப்பது எங்களது கடமையாகும்.
இந்தத் திட்டம் எங்களது கார்பன் உமிழ்வைக் குறைக்கும் முயற்சிகளை விரிவுபடுத்தவும், எங்களது விற்பனையாளர்களை இத்திட்டத்தில் இணைத்து ‘ஸ்கோப் 3’ உமிழ்வைக் குறைக்கவும் உதவும்.” டிபிஎஸ் வங்கி இந்தியாவின் கார்ப்பரேட் பேங்கிங் பிரிவு மற்றும் க்ளோபல் ட்ரான்ஸ்சாக்ஷன் சர்வீசஸ் – ஃபைனான்ஷியல் இன்ஸ்டிடியூஷன்ஸ் மற்றும் சிறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் பிரிவின் நிர்வாக இயக்குநரும் இந்தியாவின் தலைமை நிர்வாகியுமான திவ்யேஷ் தலால் கூறுகையில் “மஹிந்திரா & மஹிந்திராவுடன் இணைந்து எதிர்காலத்தை வளமாக்கும் பசுமை லட்சியங்களை நனவாக்குவதில் டிபிஎஸ் பெருமிதம் கொள்கிறது. எங்களது புதிய நிதியுதவித் திட்டம் வெறும் நிதிநிலை அறிக்கைகளுடன் நின்றுவிடாமல், டீலர் நெட்வொர்க்கை பெரிய அளவில் கார்பன் உமிழ்வற்றதாக மாற்றுவதற்கான நடைமுறை சாத்தியக்கூறுகளை வழங்குகிறது.
எங்களது எல்லை கடந்த நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, வாடிக்கையாளரின் வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில், நிகர-பூஜ்ஜிய எதிர்காலத்தை நோக்கிய மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த புதுமையான தீர்வை நாங்கள் வடிவமைத்துள்ளோம்.” என்று கூறினார்.