May 12, 2026
தண்டோரா குழு
இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை சார்பில்,டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி பெயரில் சொற்பொழிவு நிகழ்ச்சி மே 10, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
கோவை ஐ.எம்.ஏ அரங்கில் மாலை 7 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்வில், குழந்தைகள் இதய நலன் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் உரையாற்றினர்.இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை இந்த சொற்பொழிவு நிகழ்வை 2019-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவிற்கு கோவை ஐ.எம்.ஏ தலைவர் டாக்டர் பி.கோஷல் ராம் தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து,சங்கத்தின் கௌரவச் செயலாளர் டாக்டர் டி.பரமேஸ்வரன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து கௌரவித்தார்.
குழந்தை இதய சிகிச்சை குறித்த பல்வேறு முக்கிய தலைப்புகளில் மருத்துவர்கள் உரையாற்றினர்.டாக்டர் வினோத் குமார் சுந்தரராஜன்,குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை சீர் செய்யும் முறைகள் குறித்து விளக்கினார்.
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் குழந்தைகள் இருதயநோய் மருத்துவர் வினோத் துரைசாமி,குழந்தைகள் இதயவியல் துறையில் உள்ள நவீன சிகிச்சை முறைகள் குறித்து விரிவான உரையை வழங்கினார்.
குழந்தைகளுக்கு எப்போது இதய அறுவை சிகிச்சை தேவைப்படும் என்பதைக் கண்டறிந்து,அவர்களை சரியான நேரத்தில் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைப்பதில் குடும்ப மருத்துவர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் குழந்தைகள் இருதயநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் கே.எஸ்.மூர்த்தி விளக்கிக் கூறினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி,கேஎம்சிஹெச் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு ஏற்படும் இதயப் பிரச்சனைகளைக் கண்டறியவும், அவர்களுக்குச் சிக்கலான இதய அறுவை சிகிச்சைகளைச் செய்யவும் தேவையான அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் உலகத் தரத்தில் உள்ளன. அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழுவினர் இதற்காக 24 மணி நேரமும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர் என்றும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை நிர்வாகிகளுக்கு தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
நிகழ்ச்சியின் நிறைவாக டாக்டர் ஆர்.பாலமுருகன் நன்றியுரை ஆற்றினார். இந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏராளமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.