March 10, 2026
தண்டோரா குழு
டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமீபத்தில் மாணவர்களின் படைப்புத்திறனை வெளிக்கொணரும் விதமாகத் தமிழோசை இதழ் வெளியீட்டு விழா என்.ஜி.பி.கலையரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவின் துவக்கமாக கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் நீ குப்புச்சாமி வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சு.சரவணன் தனது தொடக்கவுரையில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மாணவர்களின் படைப்புக்கள் புத்தகமாக வெளிவருவது தமக்குப் பெருமகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி தனது தலைமையுரையில்,
தமிழ் மொழியின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றி வந்திருக்கும் உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் சிறப்பு என்பது மொழி ஆளுமை மிக்கவர்களைச் சீரிய முறையில் தேர்ந்தெடுத்து அவர்களது முயற்சிக்கு ஊக்கம் அளித்து ஆண்டுதோறும் விருதுகள் வழங்கிச் சிறப்பிப்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். மாணவர்கள் கல்வி கற்கும் வயதில் கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுவதற்குப் பயிற்சி எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே தமிழ்மொழி செம்மையான முறையில் வளரும் என்ற தன் செம்மார்ந்த தமிழ்க்காதலைப் பறைசாற்றினார்.
டாக்டர் என்.ஜி.பி.கல்விக்குழுமங்களின் இயக்குநர் பெ.இரா.முத்துசாமி வாழ்த்துரை வழங்கினார்.அமுதசுரபி இதழின் ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் தமிழோசை இதழை வெளியிட்டு “இலக்கியத்தில் தடம் பதிக்கும் தமிழோசை“ என்னும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.
அவர் தமது உரையில்,மாணவர்கள் கல்வி கற்கின்ற பொழுது தங்கள் படைப்பாற்றல் திறனை உணர்ந்து அவ்வழியில் தங்கள் திறனை மெருகேற்றிப் படைப்புத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுவரை இருபத்து எட்டு ஆண்டுகளாகக் கல்லூரியின் சார்பாக வெளிவந்து கொண்டிருக்கும் தமிழோசை இதழ்களை முழுமையாகப் படித்தறிந்து அட்டைப் படத்தில் வெளிவந்திருக்கும் தமிழறிஞர்களைப் பற்றிக் கூறிய அவர், பாரதி, பெரியார், கண்ணதாசன், வா.செ.குழந்தைசாமி, தற்போதைய அட்டைப் படத்தில் வீற்றிருக்கும் சிலம்பொலி செல்லப்பனார் போன்ற தமிழ் ஆளுமைகளின் தனிப்பெருமைகளையும் எடுத்துரைத்தார்.
பெரியார் தமிழ்ச்சமூகத்தில் ஏற்படுத்தியிருந்த சீர்திருத்தத்தை எடுத்துரைத்து சமதர்மமும், கல்வியறிவும் மட்டுமே ஒரு சமூகத்தை முன்னேற்றமடைந்த நிலைக்கு உயர்த்தும் என்றார். படைப்பாளியாகத் தன்னை நிலைநிறுத்துவதற்கு நிறைய நூல்களைக் கற்றுத் தினமும் அவற்றில் சிறந்த வரிகளைத் தேர்ந்தெடுத்துக் குறிப்பெடுத்து வைக்க வேண்டும் என்றார். அப்பொழுதுதான் படைப்பாளியின் சிந்தனைத் திறன் உயரும் மேம்படும் என்றார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புதிய படைப்பாளிகள் உருவாக வேண்டும் என்றார்.
தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் தமிழோசை இதழ் பதிப்பாசிரியர் முனைவர் மா.சம்பத்குமார் நன்றியுரை வழங்கினார்.