February 12, 2026
தண்டோரா குழு
பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் ஆடை மற்றும் ஆடை வடிவமைப்புத் துறை சார்பில்,EVANZA 2026 எனும் ஆடை கண்காட்சி மற்றும் கல்லூரி விழா பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது.
ஃபேஷன் என்பது ஆடைகளைத் தாண்டிய சிந்தனை மற்றும் சமூக வெளிப்பாடு என்பதை உணர்த்தும் வகையில்,பிப்ரவரி 12 அன்று நடைபெற்ற ஆடை கண்காட்சியில் B.Voc, சமூகக் கல்லூரி, B.Sc., M.Sc. ஆடை வடிவமைப்பு மற்றும் ஃபேஷன் துறையைச் சேர்ந்த மாணவிகள் வடிவமைத்த 15 சுற்றுகளில் 150-க்கும் மேற்பட்ட பிரத்யேக ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
கல்லூரியின் பல்வேறு துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகள் ரேம்ப் வாக்கில் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர். ஆடைகளுக்கேற்ற ஒப்பனை மற்றும் சிகை அலங்காரங்களை அழகு மற்றும் ஆரோக்கியத் துறை (Beauty & Wellness) மாணவிகள் மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியை GRG நிறுவனங்களின் தலைவர் டாக்டர் நந்தினி ரங்கசாமி வரவேற்புரையுடன் தொடங்கி வைத்தார்.
மும்பை கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் குளோபல் பிசினஸ் டெவலப்மெண்ட் தலைவர் ஸ்ரீ முருகன் தென்கொண்டார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஃபேஷன் துறையில் உருவாகி வரும் தொழில்முறை வாய்ப்புகள் குறித்து உரையாற்றினார்.
EVANZA 2026 அறிக்கையை ஆடை மற்றும் ஆடை வடிவமைப்பு டீன் டாக்டர் சாந்தி ராதாகிருஷ்ணன் வழங்கினார்.துறைத் தலைவர் டாக்டர் ஆர்.திவ்யா நன்றியுரை வழங்கினார்.முதலாம் ஆண்டு மாணவிகளின் ‘குழந்தைகள் ஆடை காட்சி’ மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகளின் கருப்பொருள் ஆடை காட்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.
காலை அமர்வில் அனுபமா மாரிமுத்து, எம்.வருண்யா தேவி, ராதா நந்தகி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். பிற்பகல் அமர்வில் மூன்றாம் ஆண்டு மற்றும் I PG மாணவிகளின் கருப்பொருள் நிகழ்ச்சிகளுக்கு டாக்டர் வி.கவிதா (டாக்டர் N.G.P கலை மற்றும் அறிவியல் கல்லூரி) மற்றும் ஷில்பா சுதர்சன் (அனிகா போட்டிக்) நடுவர்களாக இருந்தனர்.
பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு கைவினை மன்றத் தலைவர் ரூபா மோகன்தாஸ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளின் படைப்பாற்றலை பாராட்டினார்.கல்லூரி முதல்வர் டாக்டர் பி.பி. ஹாரத்தி வரவேற்புரை வழங்கினார். வெற்றியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.டாக்டர் டி.ஆர்.இந்துமதி நன்றியுரை கூறினார்.
பிப்ரவரி 13 அன்று நடைபெற்ற கல்லூரி விழாவில் TRASH TO TREND, MODE MASTERMIND போன்ற ஆன்லைன் போட்டிகளும், FASHION FORGE, DRAPE DYNASTY போன்ற நேரடி நிகழ்வுகளும் நடைபெற்றன. பிற கல்லூரி மாணவிகள் பங்கேற்ற COUTURE CRESCENDO ஆடை கண்காட்சி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
நிறைவு விழாவில் ‘தி நெசவு கோயம்புத்தூர்’ நிறுவனர் உமா பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.உதவிப் பேராசிரியர் திருமதி ஏ. யமுனாதேவி நன்றியுரை வழங்கினார்.
மாணவிகளின் படைப்பாற்றலும் ஆசிரியர்களின் வழிகாட்டலும் இணைந்த EVANZA 2026, ஆடை வடிவமைப்புத் துறையில் மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்திய முக்கிய கல்வி–கலாச்சார நிகழ்வாக அமைந்தது.