January 23, 2026
தண்டோரா குழு
பிகே7 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் கேரளாவை சேர்ந்த மலையாள பட இயக்குனர் பிரகபல் இயக்கி உள்ள ஜாக்கி படம் மதுரையில் பிரபலமாக இருந்த கிடாய் சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
திரையரங்குளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் , ஜாக்கி பட குழுவினர் கோவை பிராட்வேஸ் திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தனர்.இதில் நடிகர்கள் யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, இயக்குனர் பிரகபல், இசையமைப்பாளர் சக்திபாலாஜி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
கிடாய் சண்டையை மையமாக வைத்து இயக்கியுள்ள ஜாக்கி படத்தை மதுரை மண் மணத்துடன் எடுத்துள்ளதாக கூறிய இயக்குனர் பிரகபல், இதற்காக மூன்று வருடங்களாக அங்கேயே தங்கியிருந்து நிறைய ஆராய்ச்சி செய்து, கிடாய்களுக்கு நன்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்துள்ளதாக தெரிவித்தார்.
கிடாய்களுடன் நடிகர்களை பழக வைத்துள்ளதாக கூறிய அவர், படத்தில் நடித்த கிடாய்கள் இன்னும் தங்களுடனே இருப்பதாக தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு, சேவல்சண்டை போன்ற விளையாட்டுகளுக்கு பேர் போன மதுரையில்,ஒரு காலத்தில் கிடாய் சண்டை போட்டிகளும் இருந்து வந்துள்ளதாக கூறிய படக்குழுவினர், கிடாய் சண்டையை தத்ரூபமாக படமாக்கி இருப்பதாக தெரிவித்தனர்.
மலையாள பட உலகில் இருந்து மதுரை மண் மணத்தில் படம் எடுத்ததில் மொழி,கலாச்சாரம் என பல்வேறு சவால்கள் இருந்தாலும் கலைக்கு மொழி ஒரு தடையில்லை என இயக்குனர் தெரிவித்தார்.
படத்தில் நடித்துள்ள மலையாள நடிகர்கள் கூறுகையில்,
ஆரம்பத்தில் டீ குடிக்கலாமா என்ற தமிழ் வார்த்தைகளே ஆரம்பத்தில் புரியாமல் இருந்ததாகவும்,ஆனால் மதுரை தமிழை கற்று படத்தில் நடித்துள்ளதாக தெரிவித்தனர்.