November 8, 2025
தண்டோரா குழு
உணவுக்குழாய் புற்றுநோய்க்கு புது அறுவை சிகிச்சை உத்தியை உருவாக்கி,புரட்சி செய்ததற்காக கோவை ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி. பழனிவேலுவை தங்களது கவுரவ உறுப்பினராக நியமித்தது ஜப்பான் தொராசிக் அறுவை சிகிச்சை சங்கம்.
இந்த அங்கீகாரம் அவருக்கு 23.10.2025ல் ஜப்பான் நாட்டில் இந்த சங்கத்தின் 78வது ஆண்டு மாநட்டில் வழங்கப்பட்டது.
கோயம்புத்தூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டாக்டர் பழனிவேலு,
தொராசிக் சர்ஜரி துறையில், உணவுக்குழாய் புற்றுநோய்க்கான புதுமையான சிகிச்சை முறை உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக்கொண்டார்.1998 ஆம் ஆண்டு உணவுக்குழாய் புற்றுநோய்க்கு புது அறுவை சிகிச்சை உத்தி ( Thoracoscopic Esophagectomy in Prone Position) டாக்டர் பழனிவேலுவால் உருவாக்கபட்டது. இதன் மூலம் நல்ல விளைவுகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்தது.
இந்த உத்தியை ஆசிய பசிபிக் நாடுகளுக்கான மருத்துவ கருத்தரங்கு ஒன்றில் 2005ம் ஆண்டு டாக்டர் பழனிவேலு பல்வேறு மருத்துவ நிபுணர்கள் முன்பு செய்து காட்டியிருந்தார்.இதற்கு பெரும் வரவேற்பு இருந்தது.இதை தொடர்நது ஜப்பான் நாட்டில் இருந்து டாக்டர் பழனிவேலு தங்கள் நாட்டில் மருத்துவ துறையை சேர்ந்தவர்கள் முன்பு இதை செய்து காட்ட அழைப்பு விடுக்கப்பட்டது.
டாக்டர் பழனிவேலு அறிமுகம் செய்த இந்த புது அறுவை சிகிச்சை முறை ஜப்பான் நாட்டில் உணவுக்குழாய் புற்றுநோய்க்கான சிகிச்சையில் மாபெரும் மாற்றத்தை கொண்டுவந்தது. இந்த முறை சிகிச்சை பற்றிய அவரின் மருத்துவக்கட்டுரைகள் அந்நாடு மட்டுமின்றி உலக நாடுகளின் மதிப்பை பெற்றது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பாவின் பல நாடுகள், ஆசிய நாடுகளில் இந்த சிகிச்சை முறைக்கான பாராட்டும் அங்கீகாரமும் கிடைத்தது.
இந்த நிலையில், ஜப்பான் தொராசிக் அறுவை சிகிச்சை சங்கம் இப்படிப்பட்ட தாக்கத்தை இந்த துறையில் ஏற்படுத்தியதாக டாக்டர் பழனிவேலுக்கு கவுரவ உறுப்பினர் பதவி வழங்கி மரியாதை செய்துள்ளது.
இந்த புதுமை கொண்ட அறுவை சிகிச்சை முறையை டாக்டர் பழனிவேலு இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை, கோவை என பல முக்கிய நகரங்களில் உள்ள உணவுக்குழாய் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவ நிபுணர்களுக்கு பயிற்சி வழங்கி உள்ளார்.உலக நாடுகளில் உள்ள நிபுணர்களுக்கு பயிற்சி வழங்கி உள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி முதல் இதை இன்னும் தீவிரமாக முன்னெடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.