September 26, 2025
தண்டோரா குழு
கோவையில் ஜேகே டயர் நோவிஸ் கோப்பை, ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பை இரண்டாவது சுற்று போட்டிகள் வார இறுதி நாட்களான நாளை மற்றும் நாளை மறுநாள் (27 மற்றும் 28-ந்தேதி) காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெற உள்ளது.
அத்துடன் ஜேகே டயர் லெவிடாஸ் கோப்பை என்னும் ஒரே மாடல் வாகனங்கள் பங்கேற்கும் புதிய போட்டியும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தை ஊக்குவித்து வரும் ஜேகே டயர் நிறுவனம் அதன் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஆர்வமுள்ள மற்றும் தொழில்முறை பந்தய வீரர்களை உற்சாகப்படுத்தி நாட்டின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் எதிர்காலத்தை தொடர்ந்து வடிவமைத்து வருகிறது.
அந்த வகையில் கோவையில் நடைபெறும் 3 போட்டிகளிலும் இந்தியா முழுவதும் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்று வார இறுதி நாட்களில் ரசிகர்களை உற்சாகப்படுத்த இருக்கிறார்கள்.மேலும் வழக்கமான ஜேகே டயர் நோவிஸ் கோப்பை, ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பை போட்டியுடன் இந்த சீசனின் 2வது சுற்றில், மாருதி சுசுகி இக்னிஸ் பந்தய கார்கள் இடம்பெறும் ஜேகே டயர் லெவிடாஸ் கோப்பை என்னும் போட்டியில் 14 பந்தய வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
இந்தப் பிரிவில் புதுமுக பந்தய வீரர்கள் மற்றும் அனுபவமிக்க பந்தய வீரர்கள் என இருவரும் கலந்து கொள்கிறார்கள். இதில் புதியவர்கள் அனுபவமிக்க போட்டியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற இருப்பதால், பந்தயம் கூடுதல் உற்சாகமிக்கதாக இருக்கும்.
ஜேகே டயர் வழங்கும் ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பை போட்டியில், அதன் தனித்துவமான புதுமுக மற்றும் அனுபவமிக்க வீரர்கள் இணைந்து பங்கேற்க இருக்கிறார்கள்.
தொழில்முறை பிரிவில், பெங்களூருவின் அனிஷ் ஷெட்டி 30 புள்ளிகளுடன் ஏற்கனவே நடந்த முதல் சுற்றில் முன்னிலை வகிக்கிறார், அதே நேரத்தில் மும்பையின் கயான் படேல் (19) மற்றும் நடப்பு சாம்பியன் பாண்டிச்சேரியைச் சேர்ந்த நவநீத் குமார் (12) என அடுத்தடுத்த நிலையில் இருக்கிறார்கள். புதுமுக பிரிவில், பாண்டிச்சேரி பிரையன் நிக்கோலஸ் 36 புள்ளிகளைப் பெற்றுள்ளார், ஆனால் ஜோஹ்ரிங் வாரிசா (27) மற்றும் சரண் குமார் (19) ஆகியோர் 2 மற்றும் 3வது இடத்தில் உள்ளனர்.
1300சிசி சுசூகி ஸ்விப்ட் என்ஜின்களைக் கொண்ட இந்தியாவின் தொடக்க நிலை ஒற்றை இருக்கை தொடரான ஜே.கே. டயர் நோவிஸ் கோப்பையில், பெங்களூருவின் டீன் ஏஜ் வீரர் புவன் போனு, டீம் எம்.எஸ்.போர்ட்டின் தொடக்க சுற்றில் முத்திரை பதித்தார், இதன் மூலம் அவர் 30 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார். ஆனால் துரத்தல் போட்டி இன்னும் முடிவடையவில்லை. 17 புள்ளிகள் மட்டுமே எடுத்து அடுத்த இடத்தில் உள்ள பெங்களூருவின் பிரதிக் அசோக் மற்றும் டீம் டிடிஎஸ் ரேசிங்கிற்காகப் போட்டியிடும் நவி மும்பையின் ஓஜாஸ் சர்வ் (15 புள்ளிகள்) இருவரும், சில வினாடிகள் மட்டுமே பின்தங்கிய நிலையில், இந்த வார இறுதியில் நடைபெறும் போட்டியானது மிகக் கடுமையாக இருக்கும்.
செப்டம்பர் 27–28 தேதிகளில் நடைபெறும் 2வது சுற்று போட்டிகளின், அனைத்து பிரிவுகளிலும் புதிய திருப்பங்களை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். நோவிஸ் கோப்பையில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரங்கள் முதல் ராயல் என்பீல்ட் கான்டினென்டல் ஜிடி கோப்பையில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் லட்சியமிக்க புதுமுகங்கள் வரை, அடுத்த தலைமுறை கார் பந்தய வீரர்களை உருவாக்கும் லெவிடாஸ் கோப்பையின் அறிமுகம் என போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாகவும் உற்சாகமிக்கதாகவும் இருக்கும்.
நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் ஜேகே டயர் மோட்டார்ஸ்போர்ட்டின் பேஸ்புக் மற்றும் யூடியூப் சேனல்களில் இந்த போட்டிகளை நேரடியாக பார்க்கலாம்.