September 24, 2025
தண்டோரா குழு
பன்னடுக்கு தானியங்கி வாகன நிறுத்தும் இயந்திர மையங்களால், வாகன நெரிசல் குறையும் எனவும்,புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள மின்சார கார்களின் ரிசார்ஜ் வசதியால் வாகன விற்பனை மேம்படும் எனவும் சீகர் நிறுவனத்தின் இயக்குனர் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
கோவை உட்பட 2ம் நிலை தொழில் நகரங்கள் மற்றும் சென்னை, மும்பை, பெங்களூரூ, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களில் மக்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை வாகன நிறுத்துமிடம்.இடப்பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதால், சாலைகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் வகையில் பன்னடுக்கு தானியங்கி வாகன நிறுத்திமிடங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது.இருப்பினும் செலவீனங்கள் காரணமாக சில நகரங்களில் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட போதும், கோவை, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இந்த திட்டம் வெகுவாக வாகன நிறுத்துமிட பிரச்சனையை குறைக்க உதவியுள்ளது.
இதையடுத்து,பிரதான வர்த்தக சாலைகளில் இடப்பற்றாக்குறை நிலவும் நிறுவனங்கள் தங்களது வளாகங்களில் இதனை அமைக்கத்துவங்கியுள்ளன.தற்போது, அடுக்குமாடி குடியிருப்புகள், மால்கள் ஆகியவற்றின் இந்த பன்னடுக்கு வாகன நிறுத்துமிடங்கள் வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்நிலையில் கோவை அரசூர் பகுதியில் செயல்பட்டு வரும் சீகர் நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக ஜவுளித்துறையில் ஆட்டோமேட்டட் தொழில்நுட்ப இயந்திரங்களை தயாரித்து வருகிறது. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இந்நிறுவனம் தானியங்கி வாகன நிறுத்த இயந்திர மையங்களை உற்பத்தி செய்து நிறுவத்துவங்கியது.
தற்போது,சென்னை,கோவை,மும்பை, உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு இடங்களில் இந்நிறுவனம் பன்னடுக்கு தானியங்கி வாகன நிறுத்தும் இயந்திரங்களை நிறுவி வருகிறது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய நிறுவனத்தின் இயக்குனர் அஷ்வின் கரிவரதராஜ் கூறும் போது,
“இடப்பற்றாக்குறை மட்டும் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடங்கள் மிகப்பெரிய தீர்வையும் மாற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. எனவே இதில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை தொடர்ந்து புகுத்தி வருகிறோம். ஏற்கனவே 500க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தி, எடுக்கக்கூடிய டவர் பார்க்கிங், பசில் (puzzle) பார்க்கிங் ஆகிய திட்டங்கள் மிகப்பெரிய அளவில் கைக்கொடுத்து வருகின்றன. தற்போது இவி எனப்படும் மின்சார கார்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இதை கருத்தில் கொண்டு பார்க்கிங் மையங்களில் இவி கார்களை சார்ஜ் செய்யும் வசதியுடன் அறிமுகப்படுத்த இருக்கிறோம். 3 கார்கள் நிறுத்தும் இடத்தில் 18 முதல் 70 கார்கள் வரை இந்த சீகர் பார்க்கிங் வசதி மூலம் நிறுத்த முடியும். இது வாகன நெரிசலுக்கு தீர்வாக அமைவதோடு, இவி பயன்பாட்டாளர்களுக்கு உதவியாக இருக்கும்” என்றார்.
நிறுவனத்தின் செயல்பாடுகள் இயக்குனர் ஆண்டனி பரோகரன் கூறும் போது,
“பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பார்க்கிங் வசதிக்கான இடங்களுக்கு தட்டுப்பாடு இருப்பதால் வாகன நெரிசல் அதிகரிக்கிறது. தானியங்கி பன்னடுக்கு பார்க்கிங் காரணமாக நேர விரயம் குறைவதோடு சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. கனமழை காலமானாலும், தாழ்தள பார்க்கிங்கில் அமைக்கப்பட்டுள்ள பம்புகள் மூலம் தண்ணீர் உடனுக்குடன் வெளியேற்றப்படும் என்பதால், வாகனங்கள் சேதமாவதும் தவிர்க்கப்படும்.” என்றார்.
தற்போது இந்தியாவையும் தாண்டி, துருக்கி, ஹாண்டுராஸ், ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளிலும் சீகர் நிறுவனம் தனது சேவையை விரிவுப்படுத்தி உள்ளதாகவும், அந்நாடுகளின் தர நிர்ணயங்களை எட்டும் வகையிலான தொழில்நுட்பங்களை கையாண்டு வருவதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.