September 12, 2025
தண்டோரா குழு
இணைய பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு நகரங்களில் இணைய பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ‘நாக் அவுட் டிஜிட்டல் மோசடி’ என்னும் விழிப்புணர்வு இயக்கத்தை இந்தியாவின் தனியார் துறை வங்கிசாரா நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நடத்தி வருகிறது.
கோவையில் நேற்று (12-ந்தேதி) நடைபெற்றது.கோவையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் பிரிவு கோவை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண மூர்த்தி;கோவை சைபர் குற்றப் பிரிவு துணை காவல் ஆய்வாளர் பிரவீன் குமார்; கோவை நகர ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் எஸ்மற்றும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கிருஷ்ணகுமார் ஆனந்தன் மற்றும் அஞ்சனா உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில்சுமார் 75 பேர் பங்கேற்றனர். இதில் பேசியவர்கள் கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் பல்வேறு வகையான மோசடிகள் குறித்து பேசினார்கள்.போலி ஓடிபிமோசடி, பிஷிங் மோசடி, டிஜிட்டல் கைது, நிதிக் கடன் மோசடி, ஓய்வூதிய மோசடி மற்றும் பிற மோசடிகள் குறித்து பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கோவை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண மூர்த்தி கூறுகையில்,
கோவை முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.மற்ற மாவட்டங்களைப் போல கோவையிலும் அதிக அளவில் சைபர் குற்றங்கள் நடந்து வருகிறது.நகரைப் பொறுத்தவரை நாள்தோறும் குறைந்தபட்சம் 50 சைபர் குற்றங்கள் நிகழ்கின்றன.ஆனால் அதில் 20 பேர் மட்டுமே வழக்கு பதிவு செய்கிறார்கள்.
இந்த பாதிப்புக்கு பேராசை மற்றும் பயம் ஆகிய இரண்டு மட்டுமே காரணமாக உள்ளன.இதை மோசடி செய்பவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதில் இருந்து தப்பிக்க நீங்கள் எப்போதும் 1930 என்ற எண்ணை ஸ்பீடு டயலில் வைத்திருங்கள். நீங்கள் சைபர் மோசடிக்கு ஆளானால், நீங்கள் உடனடியாக அந்த எண்ணுக்கு டயல் செய்யுங்கள் என்று தெரிவித்தார்.
கோவையில் நிலவும் பல்வேறு வகையான மோசடிகள் குறித்து சைபர் கிரைம் பிரிவின் காவல் துணை ஆய்வாளர் பிரவீன் குமார் பேசுகையில்,
சைபர் மோசடியால் ஏற்படும் நிதி இழப்புகளில் அதிக வருமானம் ஈட்டும் முதலீட்டுத் திட்டங்களும் டிஜிட்டல் கைது மோசடிகளும் அதிக அளவில் உள்ளன. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், தமிழகத்தில் இதுவரை 1000 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் கோவை நகர போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.கோவை நகரில் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரைசைபர் மோசடியால் சுமார் ரூ.49 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து 230 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு35 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். குறிப்பாக, மோசடியாளர்களிடம் இருந்துரூ.14 கோடியை மீட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் பேசுகையில்,
“அடுத்த முறை ஒரு மோசடியாளர் உங்களிடம் ஓடிபிகேட்கும்போது, அது 1930 என்று சொல்லுங்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து டிஜிட்டல் மோசடியை முறியடிப்போம்!” என்று தெரிவித்தார்.நாக் அவுட் டிஜிட்டல் மோசடி திட்டமானது, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கான மோசடி இடர் மேலாண்மை குறித்த இந்திய ரிசர்வ்வங்கியின் 2024 வழிகாட்டுதல்களுக்கு இணங்க நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் போலி சமூக ஊடக கணக்குகள், நிதி நிறுவனங்களின் வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும்வலைதளங்கள், தங்கள் ஊழியர்களைப் போல போலியாக தொடர்பு கொள்வது மற்றும் ஆள்மாறாட்டம் செய்வது உள்ளிட்ட மோசடி செய்பவர்களால் செய்யப்படும் பொதுவான நிதி மோசடிகள் குறித்து மக்களின்கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
தனிப்பட்ட மற்றும் முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பது குறித்து இணைய பயன்பாட்டு சமூகத்திற்குமதிப்புமிக்க பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் இந்த விழிப்புணர்வு இயக்கம் மூலம் வழங்கப்பட்டது.இதில் ஓடிபி, பின் குறித்த பகிர்வதைத் தவிர்ப்பது, சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள், எஸ்எம்எஸ்கள்,இணைப்புகள், க்யூஆர் குறியீடுகளைக் கிளிக் செய்வது மற்றும் தெரியாத செயலிகளை பதிவிறக்குவது ஆகியவை குறித்தும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.