July 25, 2025
தண்டோரா குழு
இந்திய அளவில் ரேஸ் பிரியர்களை கவரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோயம்புத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப்’ சார்பில் 4 சக்கர வாகனங்களுக்கான புளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ.இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில்,இந்த ஆண்டு,கோவையில் நடைபெறும் 2 ம் சுற்றின் துவக்க விழா கோவை அவினாசி சாலையில் உள்ள ஜென்னிஸ் கிளப் வளாகத்தில் நடைபெற்றது.இதன் துவக்க விழாவில் காவல் துறை இணை ஆணையர் தேவநாதன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப்-பின் தலைவர் கார்த்திகேயன்,புளூபேண்ட் ஸ்போர்ட்ஸ் புரோமோட்டர் பிரேம்நாத், பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
2-நாட்கள் நடைபெற உள்ள கார் ராலியில் இந்தியா மற்றும் உலக அளவிலான வீரர்,வீராங்கனைகள் என 9 பெண் ஓட்டுநர்கள் உட்பட ஆறு அணிகளுடன் 66 போட்டியாளர்கள் வெவ்வேறு ஐ.என்.ஆர்.சி. (INRC) போட்டி பிரிவுகளில் பங்கேற்றுள்ளனர்.
கோயம்புத்தூரின் புளூபேண்ட் ரேலியில் கர்ண கடூர் ஃபேவரிட்டாக துவங்க உள்ள இதில்,இரண்டு சக்கர வாகன ரேஸ் மற்றும் ராலியில் ஏழு முறை உலக சாம்பியனான வீராங்கனை ஐஸ்வர்யா பிஸ்ஸே கோவையி்ல் நடைபெற உள்ள நான்கு சக்கர ரேலியில் அறிமுகமாகி உள்ளார்.
சனிக்கிழமை ஆறு சிறப்பு நிலைகளும், ஞாயிற்றுக்கிழமை இரண்டு நிலைகள் என மொத்தம் 265.3 கி.மீ தூரத்திற்கு ரேலி நடைபெறுவதாகவும்,அவற்றில் 116.02 கி.மீ போட்டி சிறப்பு நிலை தூரம் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
கோவையில் ரேஸ் பிரியர்கள் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த சாம்பியன்ஷிப் போட்டியை பொதுமக்கள், பந்தய பிரியர்கள் நேரில் பார்த்து ரசிக்கலாம் என்பது குறிப்பிடதக்கது.