July 12, 2025
தண்டோரா குழு
இந்திய சினிமாவில் பல்வேறு துறைகளில் திறமைமிக்கவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் மற்றும் ஸ்கிரீன் நிறுவனம் இணைந்து ஸ்கிரீன் அகாடமியை துவக்கி உள்ளது.
இந்த அகாடமியின் உறுப்பினர்களாக கேன்ஸ் மற்றும் ஆஸ்கார் விருது வென்ற, குணீத் மோங்கா, பயல் கபாடியா மற்றும் ரசூல் பூக்குட்டி, மற்றும் மூத்த திரைக்கதை எழுத்தாளர் அஞ்சும் ராஜபலி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த அகாடமி இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது, கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, அடுத்த தலைமுறை திரைப்பட கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு துவக்கப்பட்டு உள்ளது.
லோதா அறக்கட்டளையின் நிறுவனர் அபிஷேக் லோதா ஆதரவுடன் துவக்கப்பட்டுள்ள இந்த அகாடமி,இந்தியா முழுவதும் செயல்படும் திரைப்படப் பள்ளிகளால் பரிந்துரைக்கப்படும் மாணவர்களுக்கும், அவர்களின் சிறப்பான கதை சொல்லும் திறன் அடிப்படையிலும், முதுகலை திரைப்படக் கல்வியைத் தொடர விரும்பும் திறமைமிக்க மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் உதவித்தொகைகளை வழங்க உள்ளது.
இந்த அகாடமி குறித்து மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில்,
மும்பையும் திரைப்படத் துறையும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத தொடர்பைக் கொண்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தால் லாப நோக்கற்ற ஸ்க்ரீன் அகாடமி தொடங்கப்பட்டதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அகாடமி மூலம் புதுமுக திறமையாளர்களால் இந்தியத் திரைப்படத் துறை மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும செயல் இயக்குனர் அனந்த் கோயங்கா கூறுகையில்,
பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரத் துறையில் ஸ்க்ரீன் அகாடமி மூலம் காலடி எடுத்து வைத்துள்ள நாங்கள், திரைப்படத் துறையில் திறமைமிக்கவர்களை ஊக்கவிக்க அவர்களுக்கு தேவையான நிதி உதவியை அளிப்பதோடு அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தார்.
அபிஷேக் லோதா கூறுகையில்,
படைப்புக் கலைகளில் உலக அளவில் இந்தியா வளர்ச்சி பெற எங்கள் ஸ்கிரீன் அகாடமி சிறப்பாக செயல்படும். 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கு ஆதரவளிப்பதில் லோதா அறக்கட்டளை உறுதியாக உள்ளது. திரைப்படங்களும் படைப்புக் கலைகளும் நமது நாட்டின் முக்கிய பலமாகும், மேலும் இந்தத் துறையில் இந்தியா உலகளாவிய தலைவராக முன்னேறுவதில் ஸ்கிரீன் அகாடமி முக்கிய பங்கு வகிக்கும். இந்த லட்சிய முயற்சியில் ஸ்கிரீன் அகாடமியுடன் இணைவதில் லோதா அறக்கட்டளை மகிழ்ச்சியடைகிறது என்று தெரிவித்தார்.
ஸ்கிரீன் அகாடமி பெல்லோஷிப்கள் 2025 விருதுகள், முன்னணி நிறுவனங்களான இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (புனே), சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (கொல்கத்தா) மற்றும் விசில் வுட்ஸ் இன்டர்நேஷனல் (மும்பை) ஆகியவற்றில் முதுகலை பட்டப் படிப்புக்கும் மாணவர்களுக்கு முழு நிதி உதவியையும் வழங்குகிறது. மேலும் வரும் காலங்களில் இந்த பட்டியலில் இந்தியா முழுவதும் பல்வேறு திரைப்பட கல்வி நிறுவனங்கள் சேர்க்கப்பட உள்ளது.