July 4, 2025
தண்டோரா குழு
ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் சமீபத்தில் நடைபெற்ற ‘க்ரேட்டர் விழா 2025’ எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு “ப்ளூ டங்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. சத்குருவின் துணிச்சலான குரல், ஆழமான ஞானம், அசைக்க முடியாத தெளிவுக்காக இவ்விருதினை வழங்குவதாக க்ரேட்டர் நிறுவனம் கூறியுள்ளது.
ஜெர்மனியில் செயல்பட்டு வரும் “க்ரேட்டர் (Greator)” எனும் நிறுவனம், உலகெங்கும் உள்ள இளைஞர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் சுயமுன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. இதில் உலக அளவில் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி வருகின்றனர். இதற்கு முந்தைய ஆண்டுகளில் முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, உலக புகழ் எழுத்தாளர்கள் டோனி ராப்பின்ஸ், கேரி வீ உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியுள்ளனர்.
மேலும் அந்நிறுவனம் சார்பில், சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் நேர்மறையான தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஆளுமைகளை அடையாளம் கண்டு, ஆண்டுதோறும் “ப்ளூ டங்” (Blue tongue) என்ற விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது.
அந்த வகையில், இந்தாண்டிற்கான விருது ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்டது. இது குறித்து க்ரேட்டர் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “சத்குரு நம் காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆன்மீக ஆசிரியர்களில் ஒருவர். அவரது தெளிவான, ஆழம்மிக்க, அடிப்படையான ஞானம் மற்றும் நுட்பமான நகைச்சுவைக்காக உலகம் முழுவதும் அவர் கொண்டாடப்படுகிறார். அவரது வார்த்தைகள் நம்மை விழித்தெழச் செய்கின்றன, நமது எல்லைகளை விரிவுபடுத்துகின்றன மற்றும் நேரடியாக இதயத்தைத் தொடுகின்றன.
அதனால்தான் இந்த ஆண்டின் “ப்ளூ டங்” விருது சத்குருவுக்கு வழங்கப்படுகிறது. அவரது துணிச்சலான குரல், ஆழமான ஞானம் மற்றும் அசைக்க முடியாத தெளிவுக்காக இந்த விருதை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்நிகழ்ச்சியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார். மேலும் இதுகுறித்த சத்குருவின் எக்ஸ் தள பதிவில், ” உங்கள் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் நன்றி. ஆனந்தமான மனிதர்களை உருவாக்குவதே மனிதகுலத்தை உருமாற்றுவதற்கான ஒரே வழி. ஏனெனில், ஆனந்தத்தை விட மேலான நறுமணம் வேறில்லை. பேரன்பும் ஆசிகளும்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனடா இந்தியா அறக்கட்டளை சார்பில் சத்குருவிற்கு இந்தாண்டிற்கான ‘குளோபல் இந்தியன் விருது’ வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.